புதர் மண்டி கிடக்கும் பி.ஏ.பி. கிளை கால்வாய்

பி.ஏ.பி. கிளை கால்வாய் புதர் மண்டி கிடப்பதால், கடைமடைக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-12-14 18:45 GMT

பொள்ளாச்சி

பி.ஏ.பி. கிளை கால்வாய் புதர் மண்டி கிடப்பதால், கடைமடைக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கிளை கால்வாய்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பி.ஏ.பி. பிரதான கால்வாயில் இருந்து பகிர்மான கால்வாய் மற்றும் கிளை கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையம் கிளை கால்வாய் புதர்மண்டி மிகவும் மோசமான நிலையில் கிடக்கிறது. இதன் காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்தும் பயன் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கால்வாய் சேதமடைந்து இருப்பதாலும், கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கூறியதாவது:-

தூர்வார வேண்டும்

கோவில்பாளையம் கிளை கால்வாய் 12 கிலோ மீட்டர் நீளமுடையது. இந்த கால்வாய் மூலம் கப்பளாங்கரை, நெகமம், காணியாலாம்பாளையம், ரங்கம்புதூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுகின்றனர். சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால் கால்வாய் தெரியாத அளவிற்கு புதர்மண்டி கிடக்கிறது. மேலும் கால்வாயில் மரங்களின் வேர் ஊடுருவல் காரணமாக பல இடங்கள் சேதமாகி உள்ளது.

இதனால் தண்ணீர் வீணாகுகிறது. மேலும் கடைமடைக்கு தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறியும் கால்வாயை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே அடுத்த மாதம்(ஜனவரி) 3-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன் கால்வாயை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது கடைமடை விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்