தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள்
பயணிகள் வசதிக்காக திருப்பூரில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பூர்,
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சேலம், தேனி, கம்பம், நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி பனியன் நிறுவனங்கள் சார்பில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதுடன் ஒரு வாரம் வரை விடுமுறையும் அளிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு தீபாவளியையொட்டி கடந்த ஒரு வாரமாக பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
அதனைப்பெற்று கொண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொண்டு மகிழ்ச்சியுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு இன்று மதியம் முதல் தீபாவளி விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் தொழிலாளர்கள் பலர் நேற்று இரவு பணி முடிந்ததும் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனால் திருப்பூர் பழைய, புதிய பஸ் நிலையம், கோவில் வழி ஆகிய பஸ் நிலையங்களில் பயணிகள் மற்றும் பனியன் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் திருப்பூர் ரெயில் நிலையத்திலும் பயணிகள் குவிந்தனர். நெல்லை, நாகர்கோவில், திருச்சி, கரூர், உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயிலில் அதிகம் பேர் பயணித்தனர். பயணிகள் வசதிக்காக திருப்பூரில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
350 சிறப்பு பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டம் உள்ள வரை தொடர்ந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த தன்பாத் ரெயிலை பிடிக்க வடமாநில பயணிகள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்ததால் ரெயில்வே போலீசார் லேசான தடியடி நடத்தி கீழே இறக்கி விட்டனர்.