கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் - கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடம் அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-06-04 18:45 GMT


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வதை தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (பொறுப்பு) செல்வகுமார், உதவி பொறியாளர்கள் இளையராஜா, ராம்குமார், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழிப்புணர்வு

கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசுகையில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வது, சேமிப்பது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக 14 வகையான இயற்கையோடு இணைந்த மாற்றுப் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த போதிய விழிப்புணர்வுகளை இக்குழு உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மஞ்சப்பை பயன்படுத்துங்கள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஏற்கனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மூடப்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இல்லை. இருப்பினும் ஏதாவது தொழிற்சாலைகள் இருந்தால் அது குறித்து பொதுமக்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தகவல் அளிக்கப்படும் பட்சத்தில் அதனை உடனடியாக மூடி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் 14 வகையான மாற்றுப் பொருட்கள் குறிப்பாக பிளாஸ்டிக் கேரி பேக் மாற்றாக மீண்டும் மஞ்சப்பையை பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும்.

தீவிர கண்காணிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளோ வணிக நிறுவனங்களோ பயன்படுத்தினால் அவற்றை தொடர்புடைய நிர்வாக அலுவலர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும். மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இப்பணியினை மாவட்ட அளவிலான குழு தீவிர கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

கூட்டத்தில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரத்தினமாலா, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் சரவணன், திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் கீதா, தொழிலாளர் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் பேரூராட்சி செயலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்