ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வங்கி அதிகாரி மனைவி பலி
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து போளூர் வங்கி உதவி மேலாளர் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டை
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து போளூர் வங்கி உதவி மேலாளர் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்
ஆந்திர மாநிலம் இந்துப்பூர் சதாசிவ நகர் பகுதியை சேர்ந்தவர் சசிதர் நாயக். இவர், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உமா (வயது 33). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இருவரும் போளூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்கள் வங்கி விடுமுறை என்பதால் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியில் வெள்ளிக்கிழமை பயணம் செய்தனர்.
ரெயிலில் அடிபட்டு சாவு
இருவருக்கும் ரெயிலில் வெவ்வேறு இடங்களில் இருக்கை கிடைத்ததால் இருவரும் தனித்தனியாக பயணித்தனர். நள்ளிரவில் உமா கழிவறைக்கு செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது கதவு அருகே செல்லும் போது திடீரென தவறி விழுந்து, அதே ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
நேற்று அதிகாலையில் ரெயில் பெங்களூரு சென்றதும், சசிதர் நாயக் தனது மனைவி அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்றார். அங்கு மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சசிதர் நாயக், ரெயில் நிலையத்தில் தனக்கு முன்னாடி மனைவி இறங்கி இருக்கலாம் என ரெயில் நிலையம் முழுவதும் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பெங்களூரு ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர்.
ஜோலார்பேட்டை போலீசார்
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூர்-மள்ளாலனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரெயிலில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க பெண் தவறி விழுந்து அடிபட்டு இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு ரெயில்வே போலீசில் ஓடும் ரெயிலில் பயணம் செய்த பெண்ணை காணவில்லை என புகார் கொடுத்துள்ள தகவல் அறிந்ததும் உடனடியாக இறந்து கிடந்த பெண்ணின் படத்தை பெங்களூரு ரெயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் புகார் அளித்த சசிதர் நாயக்கிற்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். பின்னர் அவர் இறந்து போனவரின் அடையாளத்தை பார்த்ததும் இறந்தது தனது மனைவி உமா என உறுதி செய்தார்.
கோட்டாட்சியர் விசாரணை
ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த உமாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி மேல் விசாரணை செய்து வருகிறார்.