விவசாயிக்கு தடையின்மை சான்று வழங்காததால் வங்கி மேலாளர் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்-நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

பெரம்பலூர் அருகே வங்கி கடன்களை திருப்பி செலுத்திய விவசாயிக்கு தடையின்மை சான்று வழங்காததால் ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வங்கி மேலாளருக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.;

Update: 2023-08-03 19:19 GMT

வங்கி கடன்

பெரம்பலூரை அடுத்த ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன் மொட்டையன், விவசாயி. இந்தநிலையில் நாராயணசாமி, மொட்டையன், மொட்டையனின் மனைவி மயில் ஆகிய 3 பேரும் பாடாலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான யூனியன் வங்கியில் தனித்தனியாக கடன் பெற்றிருந்தனர். இந்தக் கடனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திருப்பி செலுத்தி விட்டனர்.

இந்த நிலையில் கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் வங்கியோடு சில ஆண்டுகளுக்கு முன்பு இணைக்கப்பட்டன. அப்போது கணினி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொட்டையன் உள்பட 3 பேருக்கும் கடன் நிலுவைத்தொகை இருப்பதாக தெரிவித்து வங்கி நிர்வாகத்தினர் கடந்த 2022-ம் ஆண்டில் மொட்டையன், அவரது தந்தை மற்றும் மனைவிக்கு தனித்தனியாக நோட்டீசு அனுப்பினர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நாராயணசாமி இறந்தார்.

தடையின்மை சான்றிதழ்

இதையடுத்து, மொட்டையன் பாடாலூரில் உள்ள யூனியன் வங்கியின் கிளை மேலாளரை அணுகி தடையின்மை சான்றிதழ் தருமாறு கேட்டார். அதற்கு வங்கி நிர்வாகத்தினர், மொட்டையன் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கிய கடன் கணக்குகளில் நிலுவை காட்டுவதால் தடையின்மை சான்று வழங்காமல் மொட்டையனை அலைய விட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மொட்டையன் பெரம்பலூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில், தனது வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வங்கியின் கிளை மேலாளர் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர்.

ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவு

வங்கியின் சேவைகுறைபாடு காரணமாகவும், மனஉளைச்சலால் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு நிவாரணத்தொகை ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.60 ஆயிரத்தை தீர்ப்பு வெளிவந்த நாளில் இருந்து 45 நாட்களுக்குள் வங்கி மேலாளர் வழங்க வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் 8 சதவீதம் ஆண்டுவட்டி கணக்கிட்டு தரவேண்டும் என உத்தரவிட்டனர். கடன் நிலுவை இல்லை என்பதற்கான சான்றிதழ். (என்.ஓ.சி.) உடனே வழங்குமாறு தங்களது உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்