பஸ் மோதி வங்கி மேலாளர் சாவு
செய்யாறில் நடைபயிற்சி சென்ற வங்கி மேலாளர் பஸ் மோதி பரிதாபமாக இறந்தார்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நரசிம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 55), தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி மேற்கொள்ள செய்யாறு ஆற்காடு பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது செய்யாறு பஸ் நிலையம் நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் பஸ்சில் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீசார் விரைந்து சென்று அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அய்யப்பன் மகன் பிரேம் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.