வங்கிகளை வாரத்திற்கு 5 நாள் மட்டுமே இயக்க திட்டம்

வங்கிகளை வாரத்திற்கு 5 நாள் மட்டுமே இயக்க திட்டம்

Update: 2022-11-01 16:59 GMT

திருப்பூர்

வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து, விரைவில் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஆதரவு இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்புகிறது.

வங்கி சேவைகள்

ஒரு காலத்தில் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சமுதாயத்தில் உயரிய அந்தஸ்து உண்டு. ஆனால் தற்போது வங்கிகணக்கு இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலைமையாகி விட்டது. அதனால் அனைத்து குடும்பத்திற்கும் வங்கி கணக்கு உள்ளது. ஏனெனில் பணப்பரிமாற்றங்களுக்கு அடித்தளமாக இருப்பது வங்கிச்சேவைகள் மட்டுமே. முன்பெல்லாம் ஒருவர் வங்கிச்சேவையை பெற வேண்டும் என்றால், நீண்டநேரம் வங்கிகளில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது வங்கி கணக்குகள் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கையும் வெகு சொற்பமாக இருந்தது. இது நாளடைவில் மாற்றம் கண்டது. மத்திய-மாநில அரசுக்களின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு வங்கிக்கணக்கு மிக முக்கியமானதாக ஆனது.

இதன் காரணமாகவும், சேமிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்ததாலும் இப்போது வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்கேற்றாற்போல், வங்கிச்சேவைகளை எளிதாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிமாற்றங்கள்தான் இப்போதைய வங்கி சேவையில் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

வாரத்துக்கு 5 நாட்கள் செயல்படும்

என்னதான் டிஜிட்டல் முறையில் சேவைகள் வழங்கப்பட்டாலும், சில தேவைகளுக்கு நேரடியாக வங்கியை அணுகவேண்டிய நிலை இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் அனைத்து தரப்பு மக்களும் அவ்வப்போது வங்கியை நாடவேண்டிய உள்ளது. தற்போது வரை வங்கிகளுக்கு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற அனைத்து நாட்களிலும் மக்கள் வங்கிகளை நேரடியாக அணுகி சேவையை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் விடுமுறைக்கான ஒப்புதல் பெற முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி இனி வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நிலை உருவாகியிருக்கிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், இந்திய வங்கிகள் சங்கத்துடனான (ஐ.பி.ஏ.) இருதரப்பு ஒப்பந்தத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவ்வாறு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டாலும், அந்த 2 வார சனிக்கிழமை வேலைநாட்களை மற்ற நேரத்தில் பணி செய்து நிவர்த்தி செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதற்கு தற்போது எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும் வருமாறு:-

மனோஜ் சுந்தர் (வங்கி அதிகாரி):-

வாரத்தில் 5 நாள் மட்டும் வங்கிகள் இயங்கும் திட்டத்தை வரவேற்கிறேன். இதனால் எங்களுடைய வேலை பளு நீங்கி விடுமுறையை குடும்பத்துடன் செலவிட முடியும். ஏனென்றால் காலை 10 மணி முதல் 5 மணி வரை வங்கிகள் செயல்படுகிறது. இதற்காக காலை 9.15-க்கு வங்கிற்குள் வந்துவிடுகிறோம். ஆனால் வங்கி வேலைகளை முடித்துவிட்டு செல்ல இரவு 7 மணி ஆகிறது. இதனால் எங்களுடைய தனிப்பட்ட வேலைகளை செய்ய போதிய நேரம் கிடைப்பதில்லை.

அதேபோல் வங்கிகளில் பணம் கொடுத்தல், வாங்குதல் மட்டுமே நடைபெறுவதாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால் வங்கியில் பணப்பரிமாற்றம் தவிர அரசு கடன் திட்டம், லோன், இன்சூரன்ஸ் போன்ற வேலைகளும் நடைபெறுகிறது. தற்போது பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்கிறார்கள். வங்கியிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை காரணமாக ஆட்களை குறைத்துள்ளனர். இதனால் 50 பேர் இருந்த இடத்தில் தற்போது 10 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். இதன்காரணமாக வங்கிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை பளு அதிகமாகவே உள்ளது. சனிக்கிழமை விடுமுறை விடப்படும்போது இந்த பணி சுமை குறைய வாய்ப்பு இருக்கிறது.

சனிக்கிழமை வரும் காசோலைகளை வெள்ளிக்கிழமைகளில் கொடுக்கும்போது 2 நாட்கள் கழித்து திங்கட்கிழமை மட்டுமே கிடைப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் கடந்த காலங்களில் காசோலை பணப்பரிவர்த்தனை செய்ய 15 நாட்கள் எடுக்கும். தற்போது வங்கியில் காசோலை கொடுத்த அடுத்த நாள் மாலைக்குள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இதற்காக காலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை 2 ஷிப்ட்களில் வங்கி காசோலைகளை நிவர்த்தி செய்வதற்கு தலைமை அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். எனவே வங்கிக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை என்பது மக்களை அதிகம் பாதிக்காது.

அகில்மணி (திருப்பூர் தொழில் கூட்டமைப்பு தலைவர்-டிப்):-

வங்கியில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பதே தொழில்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் கஷ்டமாக இருக்கிறது. இப்போது மேலும் எல்லா சனிக்கிழமைகளிலும் விடுமுறை என்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கிறது. இதில் 70 சதவீதம் தொழிலாளர்கள் வார சம்பளமும், 30 சதவீதம் ஊழியர்கள் மாத சம்பளமும் பெறுகிறார்கள். பெரும்பாலும் தொழிலாளர்களுக்கு சனிக்கிழமைகளில் வார சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை கொடுக்கும்போது பணப்பரிவர்த்தனை செய்து சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படும். வெள்ளிக்கிழமை பணப்பரிவர்த்தனை செய்து திங்கட்கிழமை சம்பளம் பெறும்போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று பணம் இல்லாமல் திண்டாடும் சூழ்நிலை உருவாகும். மேலும் அரசு தொடர் விடுமுறை நாட்களில் பணப்பரிமாற்றம் பெரிதும் பாதிக்கப்படும். வங்கிச்சேவை என்பது சங்கிலிதொடர் போல் இருக்கிறது. தொழிற்சாலைகள் நன்றாக செயல்பட வங்கிச்சேவை ரொம்பவே முக்கியம். அதேபோல் சனிக்கிழமைக்கு மாற்றாக தினமும் வங்கிகள் கூடுதல் நேரம் செயல்படுவதால் மக்களுக்கு எந்த பயனுமில்லை.

வெளிநாடுகளில் இருப்பது போல் 5 நாட்கள் வேலை என்பது நம்முடைய நாட்டிற்கு ஒத்துவராது. அப்படி செயல்படுகிற வெளிநாடுகளிலும் தற்போது மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினகூலியாக வேலை செய்பவர்கள் கூட குடும்பத்தேவைக்காக கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள். விவசாயிகளும் விடுமுறையின்றி வேலை செய்கிறார்கள். எனவே வங்கியில் வேலைபார்ப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை அளித்து, எல்லா சனிக்கிழமையும் வங்கி செயல்பட நடவடிக்கை மேற்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

மீனா (பொதுமக்கள்- டி.கே.டி.மில்):-

வங்கிகள் வாரம் 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டால் பொதுமக்கள் சிரமம் அடைவார்கள். பள்ளியில் படிக்கும் என்னுடைய மகனுக்கு வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளேன். அவனுக்கு ஏ.டி.எம். கார்டு இல்லாத காரணத்தினால் வங்கிக்கு வந்துதான் பணம் எடுக்க முடியும். பள்ளி சனிக்கிழமைகளில் விடுமுறை என்பதால் வங்கிக்கு வந்து எளிதாக பணம் பெற முடியும். ஆனால் தற்போது வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிப்பதால் பணம் எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். மேலும் சில அவசர தேவைக்காக பணம் தேவைப்படும்போதுகூட சனிக்கிழமைகளில் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.

பிரேம்குமார் (வழக்கறிஞர்-பிச்சம்பாளையம்):-

ரூபாய் நோட்டுகள் மாற்றம், கொரோனா போன்ற காரணங்களால் பணப்புழக்கம் மக்களிடையே அதிகம் குறைந்துவிட்டது. அதன்பிறகு மக்கள் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்கு மாறிவிட்டனர். இப்போது எல்லா இடங்களிலும் ஆன்லைன் பணப்பரிமாற்றம் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் வங்கிகள் சேவை கண்டிப்பாக நமக்கு தேவைப்படும். குறிப்பாக ஏ.டி.எம். மையங்களில் பணம் தொடர்ந்து கிடைக்க வங்கிகள் செயல்பட வேண்டும். எனவே சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளித்தால் பணப்புழக்கம் மறுபடியும் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதற்கு பதிலாக கூடுதலாக மற்ற நாட்களில் வேலை செய்தாலும் சனிக்கிழமைகளில் வங்கி செயல்படுவதுபோல் ஆகாது.

எஸ்.நரேஷ் குமார்(குடிமங்கலம்):-

அடுக்களையில் உள்ள பானைகளுக்குள் சிறுவாட்டுக் காசு சேர்க்கும் பழக்கம் இன்று வழக்கொழிந்து போய் விட்டது. பணத்தையோ, நகையையோ வீடுகளில் வைப்பது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி விடுகிறது. எனவே சேமிப்பு மட்டுமல்லாமல் பெரும்பாலான பணப் பரிமாற்றங்கள் வங்கிகள் மூலமே நிகழ்கிறது. வங்கிகளிலுள்ள பணத்தை எடுப்பது, பிறருக்கு அனுப்புவது என அனைத்து விதமான வேலைகளையும் வங்கிகளுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலமே மேற்கொள்ள முடிகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் கரன்சி வரை எல்லாம் டிஜிட்டல் மயமானாலும் இன்று வரை ஏ.டி.எம். பயன்படுத்தவே தயங்கும் அடித்தட்டு மக்கள் முழுக்க முழுக்க வங்கிகளையே நம்பியுள்ளனர்.எனவே வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளிப்பது கண்டிப்பாக அவர்களை பாதிக்கும்.

பி.சத்யநாராயணன் (உடுமலை):-

திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலருக்கும் வார கூலி வழங்கப்படுகிறது. மேலும் பல வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும், ஆசிரியர் மற்றும் அரசுப் பணியாளர்களும் வங்கிகளுக்கு நேரில் சென்று மட்டுமே முடிக்கக் கூடிய வீட்டுக்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பணிகளை வார விடுமுறை தினங்களிலேயே மேற்கொள்ள முடிகிறது. அதற்கு சனிக்கிழமை வங்கிகளுக்கு வேலை நாளாக இருப்பதே சரியானதாக இருக்கும். வேண்டுமானால் சனிக்கிழமைகளில் ஷிப்ட் முறையில் குறைந்த பணியாளர்களுடன் வங்கிகள் செயல்படலாம்.தற்போது மாதம் 2 சனிக்கிழமை என்பதற்கு பதிலாக எல்லா சனிக்கிழமைகளிலும் செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கந்த விலாஸ் கே.கோபாலகிருஷ்ணன் (அரிசி ஆலை உரிமையாளர்-தாராபுரம்):-

வரும் காலத்தில் மாதத்தில் உள்ள சனி மற்றும் ஞாயிறு உள்பட மொத்தம் 8நாட்கள் வங்கிகள் விடுமுறை அளித்தால் தொழில் செய்யும் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். ஏனென்றால் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அரிசி வெளியூர்களுக்கு கடனாக விற்பனைக்கு அனுப்பட்டு வருகிறது. அதற்கான வரவு செலவு முழுக்க வங்கி மூலமாக பணம் பரிவர்த்தனை நடக்கிறது.அதனால் சனிக்கிழமை கட்டாயமாக வங்கி செயல்பட வேண்டும்.

டி.எஸ். சிவகுமார் (அரிமா மாவட்ட தலைவர்- தாராபுரம்):- பொதுமக்களின் வரவு- செலவு கணக்குகள், கொடுக்கல் வாங்கல் அனைத்தும் வங்கிகள் மூலமாகவே நடைபெற்று வருகிறது. வங்கிகள் ஏற்கனவே மாதத்தில் 6 நாட்கள் விடுமுறை அறிவிப்பால் 100 நாள் வேலையாட்கள் மற்றும் இதர தொழில் செய்யும் கூலி தொழிலாளர் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பனியன் நிறுவனங்கள் பெரும்பாலும் வார சம்பளம் சனிக்கிழமை மட்டுமே வழங்குகிறது. எனவே வங்கிகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர அனைத்து நாட்களிலும் செயல்பட்டால் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

சுப்பிரமணி (காங்கயம்):-

வங்கிகள் தொடர்ந்து சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டால் வங்கியின் பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை உள்பட அனைத்தும் முடங்கி போய்விடும்.இதனால் பொதுமக்களின் பணப் பரிவர்த்தனை தாமதமாக வாய்ப்புள்ளது. பண வரவு செலவுகளில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதேபோல் நகை கடன் உள்பட அவசர கடன்கள் அனைத்தும் வாங்குவதற்கு சிரமம் ஏற்படும். மேலும் சனிக்கிழமை தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை விடுவது இல்லை. இதனால் சனிக்கிழமை தொழில் செய்வோர், தனியார் ஊழியர்கள் உள்பட அரசு ஊழியர்களை தவிர அனைவரும் பாதிக்கப்படுவர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இனி வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு வங்கி அதிகாரி மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்