பணம் கையாடல் செய்த வழக்கில் வங்கி ஊழியருக்கு 8 ஆண்டு ஜெயில்

பணம் கையாடல் செய்த வழக்கில் செட்டியப்பனூர் கூட்டுறவு வங்கி ஊழியருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-12-13 16:21 GMT

திருப்பத்தூர் தாலுகா செட்டியப்பனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு கடந்த 2003-ம் ஆண்டு செயலாளராக ரகுநாதன் பணியாற்றினார். அந்த சமயத்தில் கேத்தாண்டபட்டியை சேர்ந்த நந்தீஸ்வரி வங்கிக்கணக்கில் ரூ.6,57,308-ஐ வைப்பு (டெபாசிட்) செய்தார். அதற்கு ரகுநாதன் போலியான ஆவணங்களை கொடுத்து வங்கியில் வரவு வைத்ததாக ஏமாற்றி பணத்தை கையாடல் செய்து உள்ளார்.

நந்தீஸ்வரி இதுகுறித்து கூட்டுறவு வங்கி மற்றும் வேலூர் வணிக குற்றப்புலனாய்வு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.இதுதொடர்பான வழக்கின் விசாரணை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்-2) நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் இந்திரா மிசையல் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து மாஜிஸ்திரேட்டு திருமால் தீர்ப்பு வழங்கினார். அதில், நந்தீஸ்வரியின் பணத்தை கையாடல் செய்த ரகுநாதனுக்கு 2 பிரிவுகளில் தலா 4 ஆண்டுகள் என்று 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்