மகளை கொன்று வங்கி ஊழியர் மனைவியுடன் தற்கொலை

தக்கலை அருகே மகளை கொன்று வங்கி ஊழியர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-02 22:06 GMT

தக்கலை:

தக்கலை அருகே மகளை கொன்று வங்கி ஊழியர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வங்கி ஊழியர்

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி ஒற்றை தெருவில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 51). இவர் மார்த்தாண்டம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி ரோகிணி பிரியா (45), நாகர்கோவிலில் உள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்தார். இந்த தம்பதியின் ஒரே மகள் அர்ச்சனா (13). இவர் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

போனை எடுக்காததால்...

ரமேஷின் வீட்டின் அருகில் அவருடைய அண்ணன் மகாத்மா, அக்காள் லதா ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் ஒரே காம்பவுண்டில் வசித்தனர். ஆனால் குடும்ப தகராறு இருந்து வந்ததால் அவர்களுக்கிடையே சரிவர பேச்சு இல்லை என்று கூறப்படுகிறது. ரமேஷின் மற்றொரு அண்ணன் சுவாமி என்பவர் மார்த்தாண்டத்தில் நகை கடை நடத்தி வருகிறார்.

ரோகிணி பிரியாவின் அக்காள் மேகலா நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் மேகலா நேற்று காலையில் ரோகிணி பிரியாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அந்த போனை அவர் எடுக்கவில்லை. பின்னர் அவரது கணவர் ரமேசுக்கு போன் செய்தும் எடுக்காததால் மேகலாவுக்கு பதற்றம் உருவானது. விபரீதம் ஏதும் நடந்திருக்குமோ? என நினைத்து ரமேஷின் அண்ணன் மகாத்மாவை தொடர்பு கொண்டு மேகலா பேசியுள்ளார். அப்போது நடந்த விவரத்தை கூறிய அவர் உடனடியாக ரமேஷ் வீட்டுக்கு சென்று பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

வீட்டில் 3 பிணங்கள்

இதனை தொடர்ந்து அங்கு சென்ற மகாத்மாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது திறந்து கிடந்த வீட்டிற்குள் அங்குள்ள ஒரு அறையில் ஒரே சேலையில் ரமேசும், ரோகிணி பிரியாவும் தூக்கில் பிணமாக தொங்கினர். கட்டிலில் இறந்த நிலையில் அர்ச்சனா கிடந்தார்.

3 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுத அவர் உடனே அக்கம் பக்கத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர், தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய தம்பதி உடல்களையும், கட்டிலில் இறந்து கிடந்த அர்ச்சனா உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கடிதம் சிக்கியது

சாவதற்கு முன்பு ரமேஷ் ஏதேனும் கடிதம் எழுதி வைத்திருக்கிறாரா? என போலீசார் அறையில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் ரமேசும், ரோகிணி பிரியாவும் சேர்ந்து எழுதியது போல் இருந்துள்ளது. அதாவது, அவர்களுடைய சொத்து யாருக்கு என்பது பற்றிய விவரம் மற்றும் எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை என்பது பற்றிய தகவலும் எழுதப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மகளை கொன்று தற்கொலை

பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரமேசும், ரோகிணி பிரியாவும் ஏதோ மனவேதனையில் அர்ச்சனாவுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு ஒரே சேலையில் இருவரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்திருக்கலாம் என தெரியவந்தது.

அர்ச்சனாவின் பிணம் அருகில் விஷ பாட்டில், செவ்வாழை பழம் கிடந்துள்ளது. அதனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

சொத்துக்கள் பற்றிய விவரத்தை எழுதிய ரமேஷ், வாழ பிடிக்காமல் தன்னுடைய குடும்பத்தையே அழித்துக் கொண்டுள்ளார். ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை.

இந்த விபரீத முடிவுக்கு குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது அவர்களுக்கு யாரும் நெருக்கடி கொடுத்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை கொன்று தம்பதி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

"வாழ விருப்பம் இல்லாததால் உலகத்தை விட்டு செல்கிறோம்"

கடிதத்தில் பரபரப்பு தகவல்கள்

வாழ விருப்பம் இல்லாததால் உலகத்தை விட்டு செல்கிறோம் என சாவதற்கு முன்பு ரமேஷ் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதம் சிக்கியது

சாவதற்கு முன்பு ரமேஷ் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் ரோகிணி பிரியா, அர்ச்சனாவின் கையெழுத்தும் போடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், மேகலா, தங்களுடைய சொத்துக்கு உரிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகலா என்பவர் ரோகிணி பிரியாவின் அக்காள் ஆவார். இதனால் ரமேஷ், தன்னுடைய உடன் பிறந்தவர்களிடம் நெருக்கமாக இல்லை என்பதை இது காட்டுகிறது. மேலும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள முழு விவரம் வருமாறு:-

சொத்து விவரம்

எங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. வாழ விருப்பமில்லாமல் நாங்கள் 3 பேரும் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம். 3 பேரும் சென்ற பிறகு வீட்டை மேகலாவுக்கு உரிமையாக்குகிறேன். மேலும் வீட்டு பாதை 8 அடியாக போடப்பட்டுள்ளது. ஆனால் எழுத்து மூலமாக பதிவு செய்யப்படவில்லை. அந்த பாதையை பதிவு செய்து கொடுக்கவும். (அதில் 2 பேருடைய பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது) குழித்துறையில் 7 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தையும் மேகலாவுக்கு உரிமையாக்குகிறேன். மேகலாவுக்கு மட்டுமே சொத்தில் உரிமை உள்ளது.

வங்கி கணக்கில் உள்ள பணமும் அவருக்கே சொந்தம். இதில் யாருக்கும் உரிமை கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில், 3 பேருடைய இறுதி சடங்கு செலவுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ள விவரம் மற்றும் 2 பேருடைய பெயர் கூறி அவர்களுக்கு சொத்தில் எந்தவொரு உரிமையும் கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.

மகளுக்கு இறுதி சடங்கு செய்த தம்பதி

ரமேஷ், தன்னுடைய மகள் அர்ச்சனாவை மிகவும் பாசமாக வளர்த்தாராம். ஆனால் ஏதோ நெருக்கடி காரணமாக ரமேஷ், மனைவி ரோகிணி பிரியாவுடன் சேர்ந்து தற்கொலை செய்யும் விபரீத முடிவை தேர்ந்தெடுத்துள்ளார்.

ஆனால் பாசமாக வளர்த்த மகளை விட்டு சென்றால் அவளை யார் கவனிப்பார்? இதனால் அவரையும் நம்முடன் அழைத்து செல்வோம் என ரமேஷ், மனைவி ரோகிணி பிரியாவிடம் கூறியுள்ளார்.

இதற்காக மகளை கொலை செய்யும் பயங்கர முடிவை எடுத்த அவர், முதலில் அந்த கொடூர செயலையும் செய்தார்.

விஷம் கொடுத்து கொன்றதும் அவருக்கு இறுதி சடங்கை தம்பதி இருவரும் சேர்ந்து நிறைவேற்றியுள்ளனர். அதாவது, மகளின் இரண்டு கால் விரல்கள், இரண்டு கைகள், வாய் ஆகியவற்றை துணியால் கட்டி கட்டிலில் போட்டு தம்பதி இருவரும் இறுதி காரியம் செய்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என போலீசார் கூறுகிறார்கள். மேலும் அதனை உறுதி செய்யும் வகையில் அர்ச்சனாவின் உடல் மேற்கண்டபடி கட்டிலில் பிணமாக கிடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அதே சமயத்தில் ரமேஷ் எழுதிய கடிதத்தில் 3 பேருடைய இறுதி சடங்கிற்காக ரூ.66 ஆயிரத்து 900 ரூபாயும், மனைவி, மகளின் நகைகள் ஆகியவற்றை வைத்து விட்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்