கவர்னரின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது

Update: 2022-12-18 16:18 GMT


மக்களிடையே மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பிளவை ஏற்படுத்தும் வகையில் பேசிவரும் தமிழக கவர்னரின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது என்று திருப்பூரில் நடந்த அகில இந்திய வழக்கறிஞர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில மாநாடு

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 12-வது மாநில மாநாடு திருப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்தநிலையில் மாநாட்டின் 2-வது நாளான நேற்று புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மேலும் அகில இந்திய பொதுச்செயலாளர் சுரேந்திரநாத் நிறைவுரையாற்றினார். இதில் தலைவராக என்.ஜி.ஆர்.பிரசாத், செயல் தலைவராக கோதண்டம், பொதுச்செயலாளராக சிவக்குமார், பொருளாளராக மாசேதுங் மற்றும் துணைத்தலைவர்களாக 8 பேரும், செயலாளர்களாக 8 பேரும் என புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் மாநாட்டில் வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.15 லட்சமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும். அனைத்து நீதிமன்றங்களிலும் காலியாக உள்ள நீதிபதி மற்றும் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பெண் வழக்கறிஞர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கிளையினை தென்னிந்தியாவில் அமைக்க வேண்டும்.

தமிழ் வழக்காடு மொழி

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய நீதிமன்றங்களில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் வழக்கு நடத்த வருவதற்கு வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்தும், இளம் வழக்கறிஞர்களின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

புதியதாக பதிவு செய்த வழக்கறிஞர்கள் மீண்டும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தும் விதமாக உள்ள ஷரத்தினை ரத்து செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசே அரசு சட்டக்கல்லூரியை அமைக்க வேண்டும். மேலும் தனியார் சட்ட கல்லூரிகளை தொடர்ந்து அமைக்க அனுமதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆவண எழுத்தாளர்களாக வழக்கறிஞர்களுக்கே முன்னுரிமை கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என சட்ட திருத்தம் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.

கவர்னரின் செயல்களை கண்டிப்பது

தமிழகத்தில் கவர்னர் தனக்கான சட்டப்படியான அதிகாரங்களை மீறி மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் அரசியல் ரீதியாகவும், மதரீதியாகவும் பேசி வருகிறார். கவர்னரின் செயல்களை கண்டிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் வரவேற்புக்குழு செயலாளர் மோகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்