சூறாவளி காற்றில் முறிந்த வாழைகள்
கூடலூர் அருகே சூறாவளி காற்றில் வாழைகள் முறிந்தது. இதை கண்ட விவசாயிகள் கண் கலங்கினர்.
கூடலூர்
கூடலூர் அருகே சூறாவளி காற்றில் வாழைகள் முறிந்தது. இதை கண்ட விவசாயிகள் கண் கலங்கினர்.
சூறாவளி காற்று
கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும். கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பருவமழையை விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மாலை நேரத்தில் மட்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவர்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் மற்றும் அதன் கிளைகள் முறிந்து விழுந்தது.
வாழைகள் முறிந்தது
இந்த நிலையில் நேற்று காலை கூடலூர் அருகே பாடந்தொரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து சூறாவளி காற்றும் வீசியது. இதனால் பாடந்தொரை, கர்கப்பாலி உள்பட பல்வேறு கிராமங்களில் பயிரிட்டு இருந்த நூற்றுக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்தது. இவற்றில் பெரும்பாலான வாழைகள் அடுத்த 2 மாதங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இதை கண்ட விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதை நினைத்து கவலை அடைந்து கண் கலங்கினர்.
கோரிக்கை
மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தணிக்கை செய்து நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, விவசாய பயிர்கள் வனவிலங்குகளால் சேதம் அடைகிறது. இல்லையெனில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. தற்போது வீசிய சூறாவளி காற்றில் வாழைகள் முறிந்து விழுந்ததால் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.