பனங்கிழங்கு அறுவடை பணிகள் தீவிரம்

பனங்கிழங்கு அறுவடை பணிகள் தீவிரம்

Update: 2023-01-05 18:45 GMT

நாகை மாவட்டத்தில் பனங்கிழக்கு அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பனங்கிழங்கு சாகுபடி

'கற்பக விருட்சம்' என்று அழைக்கப்படுகின்ற பனை மரம் இயற்கை, மனித குலத்துக்கு கொடுத்த அரிய கொடையாகும். அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்தது. பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பதனீர், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு ஆகியவை உடல் ஆரோக்கியத்தை காக்கும் மருத்துவ குணம் வாய்ந்த ஊட்டச்சத்து உணவாகும்.

மார்கழி, தை மாதங்கள் பனை கிழங்கு சீசனாக கருதப்படுகிறது. நாகை மாவட்டத்தில் தெற்கு, வடக்கு பொய்கைநல்லூர், பரவை, காமேஸ்வரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவு பனங்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அறுவடை பணிகள் தீவிரம்

பனை மரத்தில் கொத்து, கொத்தாக காய்க்கும் நுங்கை வெட்டாமல் விட்டுவிட்டால் நன்றாக பழுத்து பனம்பழமாகிவிடும். இதுவும் மிகுந்த சுவையுடையது. இது ஏராளமான சத்துக்களையும் கொண்டிருக்கிறது. மரத்தில் இருந்து பனம்பழத்தை குழி வெட்டி புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு பனங்கிழங்கு அதிக அளவில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு காய்கறி, பழங்களுடன் போடப்படும் படையல்களில் பனங்கிழங்கும் இடம் பெறும். இதனால் பனங்கிழங்கு அதிக அளவில் விற்பனையாகும்.

நாகை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பனங்கிழங்கை தீவிரமாக அறுவடை செய்து வருகின்றனர். இதனால் நாகையில் பனங்கிழங்கு விற்பனைக்கு வந்துள்ளது. தள்ளு வண்டி களிலும், சைக்கிள்களிலும், சாலையோர கடைகளிலும் குவித்து வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். பனங்கிழங்கின் மருத்துவ குணம் அறிந்தவர்கள், அதனை கண்டவுடன் வாங்கி செல்கின்றனர்.

மார்கழி, தை மாதங்களில்

இதுகுறித்து நாகை அருகே பரவை பகுதியை சேர்ந்த விவசாயி போஸ் கூறியதாவது:-

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பல்வேறு மருத்துவ குணங்களில் பனங்கிழங்கும் ஒன்று. எங்கள் பகுதியை சுற்றி ஏராளமான விவசாயிகள் பனங்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். சாகுபடி செய்யும் இடத்தில் பத்து அடி நீளம், பத்து அடி அகலத்துக்கு பாத்தி கட்டிக்கொள்வோம். அதனுள் ¼ அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதற்குள் பனையில் இருந்து வெட்டி எடுத்து கொண்டு வந்த பனம்பழ விதைகளை நெருக்கமாக அடுக்கி வைப்போம். பின்னர் பாத்தி ஓரங்களில் மண்ணை அணைத்து விடுவோம். மேல் பரப்பிலும் பரவலாக மண்ணை தூவி தண்ணீர் தெளிப்போம். இதற்கு தண்ணீர் பாய்ச்ச தேவை இல்லை. மழை காலத்தில் பூமிக்குள் புகும் நிலத்தடி நீரை உறிஞ்சி தானாகவே கிழங்கு விளையும். ஒரு முறை விதைத்தால் போதும், பனங்கிழங்கு நன்றாக விளைச்சல் ஆவதற்கு 90 முதல் 100 நாட்களாகும். புரட்டாசி, ஐப்பசி மாதங் களில் பனம்பழத்தை விதைத்தால் மார்கழி, தை மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.

வரப்பிரசாதம்

ஒரு சீசனுக்கு பத்தாயிரம் கிழங்கு வரை அறுவடை செய்வோம். ஒரு கிழங்கு ரூ.3-க்கு சந்தையில் விற்கிறோம். ஒருமுறை விதைத்தால் போதும் 3 மாதம் கழித்து பிடுங்கி விற்று விடலாம்.

கஜா புயலில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் எங்கள் பகுதியில் சாய்ந்து விழுந்து அழிந்து போயின. ஆனால் எந்தவித இயற்கை பேரிடரையும் எதிர்கொண்டு, விவசாயிகளுக்கு பயன் தரும் மரமாக பனை மரங்கள் இருப்பது, இயற்கை எங்களுக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதமாகவே கருதுகிறோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்