பனங்கிழங்கு அறுவடை பணி தீவிரம்

வேதாரண்யம் பகுதியில் பனங்கிழங்கு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2023-01-11 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் பனங்கிழங்கு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பனங்கிழங்கு

தமிழரின் பாரம்பரிய உணவாகவும், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடியது பனங்கிழங்கு. இந்த பனங்கிழங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. மேலும் நார்ப்புரத சத்து உள்ளதால் மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்களுக்கு இது அருமருந்தாக உள்ளது.மருத்துவ குணம் வாய்ந்த பனங்கிழங்கு சாகுபடி கடலோர கிராமங்களில் அதிக அளவில் செய்யப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் பனங்கொட்டைகளை நன்றாக காய வைத்து மணல் திட்டுகளில் புதைத்து வைத்து விடுகின்றனர்.3 மாதத்தில் பனங்கிழங்கு மணலுக்கு அடியில் உருவாகி வளர்ந்து விடும்.

மார்கழி மாதத்தில் கிழங்குகள் அறுவடைக்கு தயாராகிவிடும். பனங்கிழங்கு சாகுபடி விவசாயிகளுக்கு செலவு இல்லாமல் நல்ல லாபம் கிடைக்கிறது.

அறுவடை பணி

பனங்கிழங்கை மண்ணில் இருந்து எடுத்து அதை நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக கருதப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பனங்கிழங்கை வாங்கி செல்கின்றனர்.

வேதாரண்யம் பகுதியில் கோடியக்கரை, கோடியக்காடு, ஆயக்காரன்புலம், நெய்விளக்கு, குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பனங்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பனங்கிழங்கு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட பனங்கிழங்கை உள்ளூர் வியாபாரிகளும், வெளியூர் வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

மதிப்பு கூட்டல்

ஒரு பனங்கிழங்கு ஒரு ரூபாய் முதல், இரண்டு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பனங்கிழங்கை கொண்டு மதிப்புகூட்டல் பொருளாக செய்து நல்ல விலைக்கு விற்று வருகின்றனர்.

பனங்கிழங்கு மூலம் பார்பி,அல்வா போன்ற பல்வேறு பொருட்கள் செய்து மதிப்பு கூட்டி விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்