மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு காரமடை நால் ரோடு பிரிவில் வாழைத்தார் மண்டி உள்ளது. பிரதி வாரம் ஞாயிறு மற்றும் புதன் ஆகிய 2 நாட்கள் மண்டி செயல்பட்டு வருகிறது. நேற்று மண்டிக்கு மேட்டுப்பாளையம் தாலுகா, அன்னூர், பவானிசாகர், புளியம்பட்டி, திருச்சி காட்டுப்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சுமார் 3 ஆயிரம் வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன. அதன் பின்னர் நடைபெற்ற ஏலத்தில் கேரளா, கோவை, நீலகிரி மற்றும் உள்ளூர் வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கோரினார்கள். ஏலத்தில் ஒரு கிலோ கதளி ரூ.25 முதல் ரூ.29 வரை, நேந்திரன் ரூ.15 முதல் ரூ.24 வரை, ஒரு தார் பூவன் ரூ.350 முதல் ரூ.420 வரை, செவ்வாழை ரூ.550 முதல் ரூ.650 வரை, தேன் வாழை ரூ.400 முதல் ரூ.450 வரை, ரஸ்தாளி ரூ.375 முதல் ரூ.400 வரை, ரொபஸ்டா ரூ.350 முதல் ரூ.400 வரை, மொந்தன் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது.
காரமடை பகுதியில் கடந்த 21-ந் தேதி சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் பாதியில் முறிந்து நாசமாகின. அந்த மரங்களில் இருந்து வெட்டப்பட்ட பிஞ்சு வாழைக்காய்களை டிராக்டரில் ஏற்றி மண்டிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வியாபாரிகளிடையே விலை போகாது என்பதால், மண்டி நிர்வாகிகள் திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் விவசாயிகள் வாழைக்காய்களை கால்நடைகளுக்கு தீவனமாகத்தான் வழங்க வேண்டும் என்று கவலையுடன் கூறி சென்றனர்.