தமிழகத்தில் எலி மருந்துக்கு தடை

தமிழகத்தில் எலி மருந்துக்கு தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2022-12-13 23:45 GMT

சென்னை,

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி சென்னை கீழ்ப்பாக்கம் மனநல அரசு ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள், சாணி பவுடர் போன்ற விஷத்தன்மை வாய்ந்த பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் என்னும் அபாயகரமான, விஷத்தன்மை வாய்ந்த எலி மருந்தை விற்க தடை செய்வதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து மொத்த விற்பனை, சில்லரை விற்பனை, வாகனங்களில் எடுத்து செல்லுதல் போன்ற அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் தடை செய்யப்பட்ட மருந்துகளின் ஆன்லைன் விற்பனையும் தடை செய்யப்பட்டு உள்ளது. சாணி பவுடர் என்னும் நச்சுத்தன்மை வாய்ந்த பவுடருக்கும் விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது.

6 பூச்சிக்கொல்லி மருந்துகள்

இதுதவிர தற்கொலைக்கு காரணமாக இருக்கும் மிகவும் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் 60 நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள பல ஆஸ்பத்திரிகளில் ஆய்வு மேற்கொண்டதில் தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள் இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் நிரந்தர தடை விதிக்கப்பட்டு உள்ள மருந்துகளை மேற்கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

'மனம்' அமைப்பு

கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் 16 ஆயிரத்து 883 இறப்புகள் தற்கொலை மூலம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு பூச்சிக்கொல்லி மருந்தும் ஒரு முக்கிய காரணம். சில மாதங்களுக்கு முன்பு 'மனம்' என்னும் திட்டம் மருத்துவக்கல்லூரிகளில் தொடங்கப்பட்டது.

இந்தநிலையில் 36 அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளிலும் 'மனம்' அமைப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்