டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க தடை
டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது
தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 1-ந் தேதி முதல் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது. 4 மாதங்களில் வங்கிகளில் கொடுத்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க உடனடியாக தடை விதித்து ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஊழியர்கள் மீது நடவடிக்கை
இதற்கான உத்தரவை புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர், கடை மேற்பார்வையாளர்களுக்கு பிறப்பித்து உள்ளார். இதன்படி நேற்று இரவில் இருந்தே மதுக்கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க கூடாது எனவும், விற்பனை தொகையை நாளை (இன்று) வங்கியில் செலுத்தும்போது அதில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீறி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கினால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பணம் மதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் அதிகளவில் மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கி விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்ற அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.