விமர்சனம் செய்ய தடை: அறப்போர் இயக்கத்தின் மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்.

Update: 2023-02-23 22:04 GMT

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், இதில் முன்னாள் முதல்-அமைச்சரும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த எடப்பாடி பழனிசாமி, சமுதாயத்தில் தனக்கு உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் விதமாக அறப்போர் இயக்கம் செயல்படுவதாகவும், தன்னை பற்றி பேச அந்த இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், நெடுஞ்சாலை துறையின் அமைச்சர் என்ற முறையிலேயே எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்ததாகவும், தனிப்பட்ட முறையில் அவரை விமர்சனம் செய்யவில்லை என்றும் அதனால், தடையை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். இந்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்