ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை
கோடை சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
கோடை சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தாவரவியல் பூங்கா
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தேயிலை தோட்டங்கள், பசுமையான புல்வெளிகள், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதே போல் மற்றொருபுறம் சினிமா படப்பிடிப்பு நடைபெறுவது வழக்கம். இயற்கை காட்சிகள், மலைகளை மோதி செல்லும் மேகக்கூட்டம் போன்றவற்றை படம் பிடிக்கின்றனர்.
குறிப்பாக தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி சினிமா ஊட்டியில் படமாக்கப்படுகிறது. நீலகிரியில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களில் கட்டணம் அடிப்படையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள தோட்டக்கலைத்துறை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்காவில் ரூ.50 ஆயிரம், தேயிலை பூங்காவில் ரூ.25 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு மரங்கள், பசுமையான புல்வெளிகள், கண்ணாடி மாளிகை, பூத்து குலுங்கும் மலர்கள் சினிமாவில் இடம்பெறுகிறது.
படப்பிடிப்புக்கு தடை
இந்தநிலையில் நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த சீசனில் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கானோர் ஊட்டிக்கு வருகின்றனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் கோடை விழா, கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவதால், கோடை சீசனில் தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு நிலையான தடை உத்தரவு கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ளது.
இதனால் இன்று (சனிக்கிழமை) முதல் தாவரவியல் பூங்கா உள்பட மாவட்டத்தில் உள்ள 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வழக்கத்தைவிட அதிகம் பேர் வருவார்கள். மேலும் நடைபாதையோரம், மலர் பாத்திகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. செடிகளுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்க்கவும், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை என்றனர்.