தாராபுரம்
தாராபுரம் பகுதியில் உள்ள விதை உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் ரூ.42 லட்சம் மதிப்பிலான 35 ஆயிரத்து 400 கிலோ விதை நெல் விற்க அதிகாரிகள் தடை விதித்தனர்.
விதைப்பண்ணைகளில் ஆய்வு
தாராபுரம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் வினியோகஸ்தர் நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் க.ஜெயராமன் தலைமை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது விதை விற்பனை உரிமம், விதை இருப்பு மற்றும் விலை விவரப்பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், விதையின் ஆதாரம், விதை விற்பனை பட்டியல், விதைகளுக்கான பதிவேடுகள், பதிவுச்சான்றிதழ், முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை, போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன்களையும் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் விதை இருப்பிற்கும், புத்தக இருப்பிற்கும் வேறுபாடு, முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை இல்லாத விதைகள் மற்றும் விற்பனை பட்டியல் முறையாக பாராமரிக்கப்படாத ரூ.42 லட்சம் மதிப்பிலான 35,400 கிலோ எடை கொண்ட நெல் விதை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
விற்பனை ரசீது
விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும்போது விற்பனை ரசீது கொடுக்கப்பட வேண்டும். அதில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயின் பெயர் மற்றும் முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மேலும் விவசாயிகளுக்கு பட்டத்திற்கு ஏற்ற ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அனைத்து விதை விற்பனை நிலையங்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் தங்களிடம் உள்ள விதை இருப்பு மற்றும் விற்பனை விவரங்களை இணைய தளத்தில் தினமும் பதிவேற்றம் செய்ய வேண்டும். விதை விற்பனை தொடர்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
------------------