வரகனேரி மாரியம்மன் கோவில்களுக்கு பால்குட ஊர்வலம்
வரகனேரி மாரியம்மன் கோவில்களுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.
திருச்சி வரகனேரி ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம் பகுதியில் உள்ள பட்டமரத்தம்மாள் மற்றும் முத்துக்கண் மாரியம்மன் கோவில்களின் 86-வது ஆண்டு காவடி விழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நேற்று மதியம் காவிரி ஆற்றில் தென்கரை சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிச்சட்டி ஏந்தியும், தீர்த்த மற்றும் பால்குடங்களை எடுத்தபடியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் ஆண்டார்வீதி, பெரியகடைவீதி வழியாக ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம் சென்று கோவிலை அடைந்தது. பின்னர் அம்மன்களுக்கு அபிஷேகமும், நெய்வேத்திய தீபாராதனையும், புஷ்பஅலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நாளை (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.