ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்
ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.;
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் கே.கே.நகர் புதுக்காலனியில் ராஜ ராஜேஸ்வாி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தையொட்டி பால்குடம் எடுக்கும் விழா நேற்று காலை நடந்தது. இதற்காக விரதமிருந்த பக்தர்கள் காலையில் அதே பகுதியில் உள்ள சிவசக்தி மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டனர். பம்பை, மேளம் முழங்க பக்தர்களின் பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.