சிவசங்கர் பாபா மனு மீதான தீர்ப்பை தடுக்கும்விதமாக மொட்டைக் கடிதம்
சிவசங்கர் பாபா மனு மீதான தீர்ப்பை தடுக்கும்விதமாக வந்த மொட்டைக் கடிதத்துக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.;
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் மீது ஒரு மாணவனின் தாய் பாலியல் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, குற்றச்சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் காலதாமதமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டது.
ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது என்று அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்வதற்கு முன்பு தன் தரப்பும் வாதத்தை கேட்கவில்லை என்று புகார் கொடுத்த பெண் மனு தாக்கல் செய்தார்.
அதையடுத்து, வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, இந்த வழக்கை மீண்டும் விசாரித்தார்.
அப்போது அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன்முகமது ஜின்னா, புகார்தாரர் சார்பில் வக்கீல் ஆர்.விவேகானந்தன், சிவசங்கர் பாபா சார்பில் வக்கீல் ஆர்.விஜயகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி மஞ்சுளா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளுக்கு கீழ்காணும் உத்தரவுகளை பிறப்பிக்கிறேன்.
சட்டத்தில் வழங்கப்பட்ட காலத்தைவிட, காலதாமதமாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் கைதானவர்களை சிறையில் அடைக்க உத்தரவிடுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுகள், காலதாமதம் குறித்து விசாரிக்க வேண்டும். அப்போது, குற்றம்சாட்டப்பட்டவரின் கருத்தையும் கேட்க வேண்டும்.
ஒருவேளை, காலதாமதத்துக்கான காரணத்தை ஏற்க முடியவில்லை என்றால், குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைக்க உத்தரவிடக்கூடாது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
காலம் கடந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தால், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள், கீழ்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம். அதுவும் தன் மீதான வழக்கு எந்த நிலையில் இருந்தாலும், இந்த மனுவை அவர் தாக்கல் செய்ய உரிமை உள்ளது.
இந்த வழக்கில், 10 ஆண்டு காலதாமதமாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் சிவசங்கர் பாபா கீழ்கோர்ட்டில் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வழக்கை முடித்துவைக்கிறேன். அதற்கு முன்பு, சில கருத்துகளை கூற விரும்புகிறேன்.
அதாவது இந்த மனுவின் விசாரணை முடிந்து தீர்ப்பை தள்ளிவைத்த பின்னர், தீர்ப்பு வழங்குவதை தடுக்கும்விதமாக புனைபெயரில் மிரட்டல் மொட்டைக்கடிதம் வந்தது. இந்தச் செயல், கேவலமானது. இது கடிதம் அனுப்பியவரின் கோழைத்தனத்தைத்தான் காட்டுகிறது.
இதுபோன்ற கேவலமான செயல் எல்லாம் இந்த ஐகோர்ட்டின் நீதி பரிபாலனத்தை தடுத்துவிடாது. இந்த மிரட்டலுக்கு எல்லாம் இந்த ஐகோர்ட்டு ஒருபோதும் வளைந்து கொடுக்காது என்பதை உரக்கச் சொல்லும்விதமாக இந்த மனு மீதான உத்தரவை பிறப்பிக்கிறேன். மனுவை முடித்துவைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.