பாவூர்சத்திரம், கடையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் நின்று செல்ல ராஜா எம்.எல்.ஏ. கோாிக்கை

பாவூர்சத்திரம், கடையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரிக்கு, ராஜா எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளார்.

Update: 2023-01-22 18:45 GMT

சங்கரன்கோவில்:

ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ., மத்திய ரெயில்வே மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம் தென்காசி, கொல்லம் வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு (வண்டி எண் 16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கிற்கு முன் கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ெரயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று சென்றது. இந்நிலையில் பாலக்காடு செல்லும்போது பாவூர்சத்திரத்திலும், பாலக்காட்டில் இருந்து வரும் போது கடையத்திலும் நிற்காமல் செல்கிறது. இந்த ெரயில் மூலம் தமிழகத்தில் இருந்து வணிக ரீதியாக கடையம், பாவூர்சத்திரம் சுற்று வட்டார பொதுமக்களும், வியாபாரிகளும் கேரளாவில் உள்ள புனலூர், கொட்டாரக்கரை, கொல்லம், கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் செல்ல இந்த ெரயில் சேவையை பயன்படுத்தி வந்தனர். கேரளா செல்ல இந்த பாலருவி ெரயில் உபயோகமாக இருந்து வந்தது.

வர்த்தக ரீதியாக லாபம் தரும் நிலையங்களாக கணக்கிடப்பட்டு கடையம், பாவூர்சத்திரம் ெரயில் நிலையங்களுக்கு மீண்டும் நிறுத்தங்கள் வழங்குவதற்கு வர்த்தக ரீதியாகவும், இயக்குதல் ரீதியாகவும் சாத்தியக்கூறுகள் உள்ளது என்று 4.10.21 அன்று மதுரை ெரயில்வே கோட்ட மூத்த இயக்குதல் பிரிவு மேலாளர், தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் கொரோனாவுக்கு முன்பு கடையம், பாவூர்சத்திரம் ெரயில் நிலையங்களில் பாலருவி எக்ஸ்பிரஸ் நின்று சென்ற நிலையில், அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரை 6 மாத காலகட்டங்களில், 23.4 லட்சம் வருமானத்துடன் 2.34 லட்சம் பயணிகளை பாவூர்சத்திரம் ெரயில் நிலையமும், 15.7 லட்சம் வருமானத்துடன் 1.31 லட்சம் பயணிகளை கடையம் ெரயில் நிலையமும் கையாண்டுள்ளது.

மேலும் இந்த நெல்லை- தென்காசி வழித்தடத்தில் இயங்கும் ஒரே தினசரி விரைவு ரெயில் இதுவாகும். தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட ெரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் என்ற முறையில், கடையம் மற்றும் பாவூர்சத்திரத்தில் இரு மார்க்கங்களிலும் பாலருவி எக்ஸ்பிரஸ் ெரயில் நின்று செல்ல வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும். இதனை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்