உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இணைப்பு சாலைகள் சந்திப்பில் தரைமட்ட பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது. காலம் கடந்த அந்த பாலங்கள் ஆங்காங்கே சேதம் அடைந்தும் வருகின்றது. அவற்றை புதுப்பிக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு சில சேதமடைந்த பாலங்கள் மாதக்கணக்கில் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.அந்த வகையில் நகராட்சி பூங்காவுக்கு அருகே உள்ள ராஜேந்திர ரோடு சந்திப்பில் தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. அதை சீரமைப்பதற்கு நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக சேதம் அடைந்த பகுதியை தடுப்பு வைத்து மறைத்து உள்ளனர். இந்த சாலை பொதுமக்கள் ஆஸ்பத்திரி, அரசு அலுவலகங்கள் செல்வதற்கு உதவிகரமாக உள்ளது. ஆனால் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் விரைந்து சென்று சேவையை பெற முடியாத நிலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் சேதம் அடைந்த பகுதியை கடக்கும் போது நிலை தடுமாறி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. எனவே ராஜேந்திரா ரோடு சந்திப்பில் சேதம் அடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.