மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 5 பெரிய கோபுரங்களுக்கு பாலாலயம் - கும்பாபிஷேக பணிகள் தொடக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 5 பெரிய கோபுரங்களுக்கு பாலாலயம் நடந்தது. இதன் மூலம் கும்பாபிஷேக பூர்வாக பணிகள் தொடங்கியது.;
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 5 பெரிய கோபுரங்களுக்கு பாலாலயம் நடந்தது. இதன் மூலம் கும்பாபிஷேக பூர்வாக பணிகள் தொடங்கியது.
கும்பாபிஷேகம்
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. மேலும் இந்து கோவிலில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகமவிதி. எனவே ஆகமவிதிப்படி கடந்த 2022-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்த ஏற்பாடுகளும் எடுக்கப்படாமல் இருந்தது. மேலும் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் சுவாமி சன்னதி வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. அந்த மண்டபத்தை சீரமைக்கும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.
எனவே மண்டபம் மற்றும் கும்பாபிஷேக பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும், வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் புனரமைக்கப்படும் என்றார். மேலும் இந்த திருப்பணிகள், புனரமைப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகளில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறிவித்தார்.
கோபுரங்களுக்கு பாலாலயம்
அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முடக்கி விடப்பட்டன. மேலும் கோவிலில் உள்ள கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 9 நிலை கோபுரங்கள் மற்றும் அம்மன் சன்னதி 7 நிலை கோபுரம் என 5 கோபுரங்களுக்கு பாலாலயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவில் ஸ்தானிக பட்டர்கள் ஹாலாஸ், வேலாயுதம், செந்தில் ஆகியோர் தலைமையில் பூஜைகள் தொடங்கியது. அதை தொடர்ந்து யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் புறப்பாடு நடந்தது. அதனை பட்டர்கள் 2-ம் பிரகாரம் வலம் வந்து உற்சவர் சுவாமி சன்னதியில் சிறப்பு பூஜைகளுடன் பாலாலய பூஜை நடைபெற்றது. அப்போது 5 கோபுரங்கள் வரையப்பட்ட மரப்பலகையில் கலசத்தில் உள்ள புனித நீரால் பூஜைகளும், சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. இதையொட்டி அங்கு சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி, சுந்தரேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், கோவில் இணைகமிஷனர் கிருஷ்ணன், மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, கோவில் என்ஜினீயர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.