பத்திரக்கோட்டையில் பலா திருவிழா
பண்ருட்டி அருகே பலா திருவிழாவை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டையில் காவேரி கூக்குரல், ஈஷா மையம் இணைந்து மாபெரும் பலா திருவிழா வை நேற்று முன்தினம் நடத்தியது. இதை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்து, காட்சிபடுத்தப்பட்ட பலா வகைகளை பார்வையிட்டார். விழாவில் ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குனர் ஹரிதாஸ் கலந்து கொண்டு, 100 வகை பலா, 100 வகை சுவை பற்றி விளக்கினார்.
முன்னதாக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் வரவேற்றார். தொடர்ந்து முன்னோடி விவசாயி குமாரவேல், பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் கருணாகரன், தஞ்சாவூர் இந்திய உணவு பதப்படுத்துதல் ஜெகன்மோகன், ஜேம்ஸ் ஜோசப், சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிவப்பு பலா சிறப்புகள், பலாவில் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம், எந்திரம், சந்தைப்படுத்துதல், 90 நாட்களில் சர்க்கரையை கட்டுப்படுத்துவது சாத்தியம் போன்ற தலைப்புகளில் பேசினர்.
அரசு மானியம்
அதையடுத்து தோட்டக்கலை துறை இணை இயக்குனர் அருண் கலந்து கொண்டு பலாவுக்கு அரசு வழங்கும் மானியங்கள் குறித்தும், மதுரை ஜோஸ்பின் மேரி பலாவில் தேனீ வளர்ப்பு குறித்தும், முன்னோடி விவசாயி திருமலை பலாவுக்கு இடையில் மிளகு வளர்ப்பு குறித்தும் பேசினர். தொடர்ந்து விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். இந்த பலா திருவிழாவில் பலா வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இந்த திருவிழாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் கல்லூரி மாணவர்களும் வந்து பார்வையிட்டனர்.