ஜாமீனில் வந்த வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

மயிலாடுதுறையில், காதல் மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த வியாபாரி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-04-01 18:45 GMT

மயிலாடுதுறையில், காதல் மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த வியாபாரி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறு

மயிலாடுதுறை காமராஜர் சாலை அக்பர் காலனியைச் சேர்ந்தவர் அருள்(வயது 48). இவர், மயிலாடுதுைற பஸ் நிலையத்தில் புத்தகம் மற்றும் தின்பண்டம் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். அருளும், ரேவதியும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

குடிபோதைக்கு அடிமையான அருளுக்கும், அவரது மனைவி ரேவதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு ரேவதி சென்று விட்டார். பின்னர் அவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.

மனைவியை குத்திக்கொன்றார்

கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் 12-ந் தேதி இரவு வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ரேவதியை அருள் வழிமறித்து தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருளை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைந்தனர்.

ஜாமீனில் வந்தவர் தூக்கில் பிணம்

இந்த வழக்கில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மயிலாடுதுறை ெரயிலடி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த 2 நாட்களாக அவர் தங்கியிருந்த அறை திறக்காமல் இருந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர், அருளின் உறவினர்களை அழைத்து வந்து அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அந்த அறையில் உள்ள மின்விசிறியில் அருள் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்