புத்தகப்பை, சீருடை வாங்க கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்

Update: 2023-06-10 14:32 GMT


கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி செல்ல தேவையான புத்தகப்பை, சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

கல்வி உபகரணங்கள்

தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் நிலவி வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி போடப்பட்டிருந்தது. தற்போது 6 முதல் பிளஸ்-2 வரைக்கும் நாளையும்(திங்கட்கிழமை), 1 முதல் 5-ம் வகுப்பு வரைக்கும் வருகிற 14-ந்தேதியும்(வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் பள்ளி செல்வதற்கு தேவையான புத்தகப்பை, நோட்டுகள், உள்ளிட்ட பல்வேறு வகையான கல்வி உபகரணங்களை வாங்குவதற்கு திருப்பூரில் கடைகளுக்கு பொதுமக்கள் சென்றவண்ணம் உள்ளனர். இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் பெரியகடை வீதி சூர்யா ஜெனரல் ஸ்டோர் உள்பட மாநகரின் பல கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல் பள்ளிகளின் சீருடைகளை தைப்பதற்காக சிலர் தையல் கடைகளுக்கு செல்கின்றனர். சிலர் ரெடிமேடாக விற்பனை செய்யப்படும் சீருடைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் துணிக்கடைகளிலும், தையல் கடைகளிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மக்கள் கூட்டம்

இதேபோல், புது ஷூ மற்றும் காலனிகள் வாங்குவதற்காகவும் காலனி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும், வளையல், கம்மல் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் மாணவிகள் அதிக அளவில் செல்கின்றனர்.

நேற்று மாநகரில் உள்ள முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வாகனப்போக்குவரத்தும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. பள்ளி திறப்பிற்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் இன்று கடை வீதிகளில் கூட்டம் மேலும் அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்