மோசமான வானிலை: வாழும் கலை ரவிசங்கர் வந்த ஹெலிகாப்டர் வனப்பகுதியில் தரை இறங்கியதால் பரபரப்பு

மோசமான வானிலை காரணமாக வாழும் கலை அமைப் பின் நிறுவனர் ரவிசங்கர் வந்த ஹெலிகாப்டர் வனப் பகுதியில் தரை இறங்கியது.

Update: 2023-01-26 00:18 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைக்கிராமம் உள்ளது. இந்த பகுதியில் நேற்று காலை 10 மணி அளவில் ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமடித்தபடி இருந்தது. திடீரென அந்த ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் அவசர அவசரமாக தரை இறங்க கீழ்நோக்கி வந்தது. பின்னர் ஊகியம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாக மைதானத்தில் தரை இறங்கியது.

சத்தம் கேட்டு அருகே உள்ள வீடுகளில் இருந்தவர்கள் பதற்றத்துடன் வெளியே வந்து பார்த்தனர். ஹெலிகாப்டர் அருகே பெங்களூரு வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மிக குருவுவான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நின்று கொண்டிருந்தார். உடன் அவரது உதவியாளர்கள் சிலரும் வந்திருந்தனர்.

பனிமூட்டம் காரணமாக...

ஹெலிகாப்டர் பள்ளிக்கூட மைதானத்தில் திடீரென தரை இறங்கிய தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. வேடிக்கை பார்ப்பதற்காக சுற்று வட்டார கிராம மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கடம்பூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், அந்த ஹெலிகாப்டரில் பெங்களூரு வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மிக குருவான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் பெங்களூருவில் இருந்து திருப்பூரில் நடக்கும் ஒரு ஆன்மிக நிகழ்ச்சிக்கு சென்றது தெரிய வந்தது.

பனிமூட்டம் காரணமாக அங்கு ஹெலிகாப்டரை அவசர அவசரமாக தரை இறக்கியதும் தெரியவந்தது. பகல் 11.15 மணி அளவில் வானிலை சீரானதும் ஹெலிகாப்டர் திருப்பூர் புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்