100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

திருச்சுழியில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

Update: 2022-10-05 18:43 GMT

திருச்சுழி, 

திருச்சுழியில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

சமுதாய வளைகாப்பு

திருச்சுழியில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். விழாவில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, தமிழக அரசின் சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்றைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் நம் வீட்டு பெண் என்ற சகோதர உணர்வோடு நானும், கலெக்டரும் கலந்து கொண்டிருக்கிறோம்.

வளமான சமுதாயம்

நம்முடைய பாரம்பரியத்தின்படி, கர்ப்பிணிகள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், அவர்களுக்கு பிறக்கும் நாளைய சமுதாய குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும். மக்களும், வருங்கால சந்ததிகளும் எந்த ஒரு நோயும் இல்லாமல் இருந்தால்தான் அது ஒரு நல்ல ஆட்சிக்கான சான்றாகும். இன்றைய குழந்தைகள்தான் நாளைய மருத்துவராக, பொறியாளராக, தொழில்நுட்ப வல்லுநராக உருவாகின்றனர்.

எனவே, இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட அனைத்து கர்ப்பிணிகளும், கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பொன்னுதம்பி, வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்