250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
நல்லம்பள்ளியில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளியில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
சமுதாய வளைகாப்பு
தர்மபுரி மாவட்ட சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை மற்றும் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகளின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழா, சமுதாய வளைகாப்பு விழா நல்லம்பள்ளியில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 250 கர்ப்பிணிகளுக்கு கலெக்டர் சாந்தி சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து அறுசுவை உணவு பரிமாறினார்.
விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
கர்ப்பிணிகள் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகின்றது. கர்ப்பிணிகள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் உங்கள் கருவில் வளரும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனைகளையும், மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள் போன்றவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி கொள்ள வேண்டும். தாய்மார்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
ஆரோக்கியம்
ஒரு குழந்தைக்கு எந்த அளவிற்கு தாய்ப்பால் கொடுக்கப்படுகின்றதோ அப்போது தான் குழந்தைக்கு ஆரோக்கியம், உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி அனைத்தும் முழுமையாக கிடைக்கும். இதனை கருத்தில் கொண்டு தாய்மார்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது போன்ற சமுதாய வளைகாப்பு விழா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த விழாவில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, மாவட்ட கவுன்சிலர் மாதுசண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ஜான்சிராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஷகிலா, வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.