திருப்பூரில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு - பெண் ஒருவர் கைது

திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தையை போலீசார் 12 மணி நேரத்தில் மீட்டனர்.;

Update: 2023-04-26 07:21 GMT

திருப்பூர்,

ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (24). இவர்கள் பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். கர்ப்பிணியான கமலினி கடந்த 22-ந் தேதி பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அன்றைய தினமே ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலியின் அருகில் கருச்சிதைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக எஸ்தர் ராணி என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவியாக உமா என்ற பெண் ஒருவரும் இருந்துள்ளார். அருகருகே இருந்ததால் உமா, கமலினியின் குழந்தைகளை கவனித்து வந்து அவருக்கு உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் உமா உதவி செய்து வந்ததால், அர்ஜூன்குமார் நேற்று வேலைக்கு சென்றுள்ளார். இதற்கிடையே மாலை வேலை முடிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன்குமார் குழந்தையை கேட்டுள்ளார். அப்போது உமா இன்குபேட்டரில் சிகிச்சை அளிக்க குழந்தையை கேட்டதாக கூறி வாங்கி சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார். அருகில் சிகிச்சை பெற்று வந்த எஸ்தர் ராணியும் காணவில்லை. இதனால் சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு சென்று அர்ஜூன்குமார் பார்த்தபோது அங்கு உமாவும் இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அர்ஜூன்குமார் இதுகுறித்து செவிலியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் குழந்தையை காணவில்லை எனவும், அருகில் இருந்தவர்கள் கடத்தி சென்று விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து குழந்தை கடத்தல் குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் குறித்தும் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே குழந்தை கடத்திச் சென்றதாக பெண் ஒருவர் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு தேடி வந்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்களை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான இரண்டு பெண்களையும் தேடினர்.

இந்த நிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான உமா கள்ளக்குறிச்சியில் இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி விரைந்த தனிப்படை போலீசார், உமாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கைது செய்யப்பட்ட உமாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை கடத்தல் வழக்கில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை 12 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டுள்ள காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்