கிணற்றில் பிணமாக மிதந்த பச்சிளம் பெண் குழந்தை

கிணற்றில் பச்சிளம் பெண் குழந்தை பிணமாக மிதந்தது.;

Update:2023-09-20 03:56 IST

துறையூர்:

பிணமாக மிதந்தது

துறையூர் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் பச்சிளம் பெண் குழந்தை பிணமாக மிதந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி குழந்தையின் உடலை மீட்டு, துறையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த குழந்தை பிறந்து சில நாட்களே ஆகியிருக்கலாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அந்த குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டதா?, குழந்தையை வீசிச்சென்றது யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு

*முசிறிைய அடுத்த தும்பலத்தை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 38). கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவரிடம் கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளவர்களிடம், அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ரமேஷ் (37), சரவணன் (40) ஆகியோர் டிஷ் ஆண்டனா அமைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி பிரச்சினை ஏற்படுத்தியதாகவும், இதனை கேட்ட சசிகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சசிகுமார் அளித்த புகாரின்பேரில் முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

*திருச்சி கீழ வண்ணாரப்பேட்டை பகுதியில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்றதாக புத்தூர் பகுதியை சேர்ந்த முத்தையா(35), அருணகிரி (25) ஆகியோரை போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்ட காகிதங்கள், ரூ.350 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ரவுடி கைது

*திருச்சி கீழசிந்தாமணி கோரிமேடு பகுதியை சேர்ந்த பிரசன்னா(25), தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவருடைய கடைக்கு வந்த ஒரு வாலிபர், அவரிடம், மதுகுடிக்க ரூ.500 தரும்படி கேட்டு, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் திருச்சி கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பணம் கேட்டு மிரட்டியது அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (22) என்பதும், ரவுடியான இவர் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதும், தற்போது குற்றம் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

*திருச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியம் உத்தரவின்படி, சிறுகாம்பூர் வட்டார அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ்கண்ணன் மேற்பார்வையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் மண்ணச்சநல்லூர் போலீசார் நேற்று திருப்பைஞ்சீலி கடைவீதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில மளிகை கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து, எச்சரிக்கை விடுத்தனர்.

பா.ஜ.க. மண்டல் தலைவர் மீது வழக்கு

*திருச்சி உறையூரில் நாச்சியார் கோவில் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந் தநாளையொட்டி பா.ஜனதா கட்சியினர் விளம்பர பதாகை வைத்திருந்தனர். இது அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்ததாக பா.ஜனதா கட்சியின் உறையூர் மண்டல் தலைவர் ராஜேஷ் மீது உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்