முதுமலையில் குட்டி யானை சாவு
தர்மபுரியில் தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்டு, முதுமலையில் பராமரித்து வந்த குட்டி யானை இறந்தது.
கூடலூர்,
தர்மபுரியில் தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்டு, முதுமலையில் பராமரித்து வந்த குட்டி யானை இறந்தது.
குட்டி யானை சாவு
தர்மபுரியில் தாயை பிரிந்து கிணற்றில் தவறி விழுந்த ஆண் குட்டி யானை பாகன் பொம்மன் மற்றும் வனத்துறையினர் மூலம் மீட்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 16-ந் தேதி அங்கிருந்து நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் மேற்பார்வையில் குட்டி யானைக்கு திரவ உணவுகள் வழங்கப்பட்டு வந்தது. மேலும் தம்பதியினர் பொம்மன்- பெள்ளி குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் குட்டி யானையின் உடல் நலன் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ குழுவினர், வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1 மணிக்கு குட்டி யானை பரிதாபமாக இறந்தது. இதனால் வனத்துறையினர் மற்றும் பாகன் தம்பதியினர் மத்தியில் சோகம் நிலவியது.
வயிற்றுப்போக்கு
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
குட்டி யானைகளுக்கு மனிதர்கள் உட்கொள்ளும் (லேக்டோஜன்) பால் பவுடர் உணவாக அளிக்கப்படுகிறது. இது செரிப்பதற்கான என்சைம் யானைகளில் சுரப்பது மிகவும் குறைவு. கைவிடப்பட்ட குட்டி யானைகளுக்கு என்சைம்கள் சுரப்பது மிக மிக குறைவு. எனவே, செரிமானம் ஆகாமல் சிறிது சிறிதாக உடலில் சேகரம் ஆகும். பின்னர் திடீரென்று வயிற்றுப்போக்கு தொடர்ச்சியாக இருக்கும்.
அதற்கு முன்பு வரை அறிகுறி வெளியே தெரியாது. அதுவரை குட்டி யானை சுறுசுறுப்பாக இருக்கும். நன்றாக விளையாடும். தற்போது பராமரித்த குட்டி யானையும் இவ்வாறு பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் முழு விவரம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர் குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு, வனத்துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தீ மூட்டினர்.
---
(பாக்ஸ்)ஓராண்டில் 13 யானைகள் உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது. நடப்பாண்டில் கூடுதல் வரவாக தர்மபுரியில் இருந்து கடந்த 16-ந் தேதி ஆண் குட்டி யானை கொண்டு வந்து பராமரிக்கப்பட்டது. ஆனால், 2 வாரங்களில் உடல்நலன் பாதித்து இறந்து விட்டது. இதனால் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை மீண்டும் 28 ஆக குறைந்து உள்ளது. இதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஆண்டு உடல்நிலை பாதிப்பால் 13 காட்டு யானைகள் உயிரிழந்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
(பாக்ஸ்)பிள்ளையை இழந்தது போல் உணர்கிறேன்
பாகன் பெள்ளி பேட்டி
இதுகுறித்து பாகன் பெள்ளி நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்மபுரியில் தாயை இழந்த குட்டி யானை 25 அடி ஆழ கிணற்றில் விழுந்து தவிப்பதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் எனது கணவர் பொம்மனை அழைத்துச் சென்று குட்டியை மீட்டு வனத்துறையினர், மருத்துவக் குழுவினர் முதுமலை முகாமுக்கு கொண்டு வந்தனர்.
அந்த குட்டி யானையை பராமரிக்கும் பொறுப்பை எங்களிடம் வழங்கினர். தினமும் காலையில் குளிப்பாட்டி நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்து அதற்கு பால் குடிக்க கொடுப்போம். பின்னர் அதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் கொண்டு விடுவோம். கால்நடை மருத்துவ குழுவினர் கண்காணிப்பில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தது.
அழுகை வந்துவிட்டது
இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் வயிற்றுப்போக்கு ஏற்படுவதாக கூறினர். நேரில் சென்று பார்த்தேன். அதன் தலையை எனது மடியில் வைத்து தடவி கொடுத்தேன். மற்ற நாட்களில் நான் காலையில் செல்லும்போது எனது சேலை அல்லது கைகளை தும்பிக்கையால் பிடித்தபடி பாசமாக ஓடிவரும்.
உடல்நிலை சரியில்லாத சமயத்தில் படுத்து கிடந்தபடி இருந்தது. இதைப் பார்த்த உடன் எனக்கு அழுகை வந்துவிட்டது. தொடர்ந்து மருத்துவக்குழுவினரும் சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர். உணவு ஜீரணமாகாமல் தொடர்ந்து வயிற்றோட்டம் சென்று கொண்டிருந்தது.
இதனால் அழுது கொண்டிருந்த என்னை அதிகாரிகள் வீட்டுக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர். இந்தநிலையில் குட்டி யானையும் நள்ளிரவு இறந்து விட்டது. இதனால் ஒரு பிள்ளையை இழந்தது போல் உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.