பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை-தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்

Update: 2023-03-11 18:45 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த 4 மாத குட்டி யானையை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

4 மாத குட்டி யானை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர், ஒகேனக்கல், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி வருகின்றன.

மேலும் அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன. விவசாய நிலங்களுக்குள் புகும் யானைகள் மின்வேலியில் சிக்கியும், கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியாவதும் தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து 4 மாத ஆண் குட்டி யானை ஒன்று, தாயை பிரிந்து விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்தது. அப்போது நீர்குந்தி கிராமத்தில் செல்வன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்குள் திடீரென குட்டி யானை தவறி விழுந்தது.

ஒரு மணி நேரத்துக்கு பிறகு மீட்பு

அப்போது அங்கிருந்த நாய்கள் கிணற்றை பார்த்து குரைத்து கொண்டிருந்தன. இதனால் செல்வன் கிணற்றுக்குள் பார்த்தபோது, அங்கு குட்டி யானை தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு குட்டி யானை, கயிறு கட்டி பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வரப்பட்டது.

வனப்பகுதியில் விடப்பட்டது

சரியாக நிற்ககூட முடியாமல் குட்டி யானை தவித்தது. அதற்கு பொதுமக்கள் உணவு கொடுத்தனர். மேலும் குட்டி யானையுடன் அவர்கள் 'செல்பி' எடுக்க அலைமோதினர். குட்டி யானைக்கு உடலில் காயங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என கால்நடை பராமரிப்பு துறையினர் சோதனை செய்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் குட்டி யானையை வாகனத்தில் ஏற்றிச் சென்று, போடூர் சின்னாறு வனப்பகுதியில் விட்டனர்.

விவசாய கிணற்றுக்குள் 4 மாத குட்டி யானை தவறி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்