காதலிக்கு பிறந்த குழந்தை திடீர் சாவு

கள்ளக்குறிச்சியில் திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைதான நிலையில் காதலிக்கு பிறந்த குழந்தை திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-11-08 18:45 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பார் கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை(வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்து. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தனா். இதில் அந்த பெண் கர்ப்பமானார்.

இது பற்றி அவர், செல்லதுரையிடம் கூறி, உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் செல்லதுரையோ, தனது காதலியை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

குழந்தை திடீர் சாவு

இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு கடந்த மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகும் அவரை திருமணம் செய்ய செல்லதுரை மறுத்தாா். இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லதுரையை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களது குழந்தை திடீரென இறந்தது. இது குறித்து விளம்பார் கிராம நிர்வாக அலுவலர் அலமு கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்