பாபநாசம் பகுதியை மயில்கள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்

பாபநாசம் பகுதியை மயில்கள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்;

Update: 2023-03-27 19:41 GMT

பாபநாசம் பகுதியை மயில்கள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டம்

தமிழகத்தில் விராலிமலை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மயில்கள் அதிகமாக காணப்படுகின்றன. தற்போது டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டம் பாபநாசம், கும்பகோணம், வலங்கைமான், திருமானூரில் இருந்து அணைக்கரை வரை உள்ள கொள்ளிட கரை ஆகிய பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் உள்ளன. கர்நாடகா மாநிலத்தில் பங்குபூர், ஆதிசிந்தனகிரியிலும், மராட்டிய மாநிலத்தில் நெய்கானிலும் மயில்கள் சரணாலயம் அமைந்துள்ளன. இந்தியாவின் தேசிய பறவையான மயில் இறைச்சிக்காகவும், இறகுகளுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,

மயில்கள் சரணாலயம்

பாபநாசம், கும்பகோணம், வலங்கைமான், குடவாசல் பகுதிகளில் அதிக அளவில் மயில்கள் காணப்படுகின்றன. மயிலுக்கு நெல் மிகவும் பிடித்தமான உணவு. இவை மற்ற பறவைகளை போல சட்டென்று வேகமாக பறந்து செல்லாது. டெல்டா பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மயில்கள் காணப்படுகின்றன. மயில் இறகுகள் கிலோ ரூ.2,000 முதல் ரூ. 3,500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. மயில் எண்ணெய் மருத்துவ குணம் உள்ளது என கூறி விற்கப்படுகிறது. இதற்காக மயில்கள் வேட்டையாடப்படுகின்றன.

மயில்களை பொருத்தவரை குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள காடுகளில் அதிகம் காணப்படுகின்றன. உணவு மற்றும் குடிநீா் தேடி விவசாய தோட்டம், குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் மயில்கள், நாய்களால் கடிபட்டும், சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதியும் உயிரிழக்கின்றன.

எனவே மயில்கள் அதிக அளவு காணப்படும் பாபநாசம் பகுதியை மயில்கள் சரணாலயமாக அறிவிக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்