பாபநாசம் அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது

Babanasam dam water level dropped below 50 feet;

Update:2023-08-30 03:05 IST

நெல்லை மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை கைகொடுக்காமல் பொய்த்து போனது. இதனால் குளங்கள், கால்வாய்கள் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடக்கின்றன. தற்போது அக்னி நட்சத்திர காலம் போல் வெயிலும் சுட்டெரித்து வருகிறது. மதிய நேரத்தில் அனல் காற்றும் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேேய முடங்கும் நிலை உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை திகழ்கிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் ஓரிரு நாட்கள் பெய்த மழையால் அணை நீர்மட்டம் 70 அடிக்கு மேல் உயர்ந்திருந்தது. அதை நம்பி பாசனத்துக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் மளமளவென்று சரிந்ததுடன், அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் அளவும் வெகுவாக குறைந்தது.

இதையடுத்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் அளவும் குறைக்கப்பட்டது. அதாவது, குடிநீருக்கு மட்டும் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 364 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நீர்வரத்தும் 125 கன அடியாகவே இருந்தது.

எனினும் தொடர்ந்து மழை பெய்யாததாலும், வெயில் சுட்டெரித்ததாலும் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்து, 49.40 அடியாக இருந்தது.

இந்த அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக மாவட்டத்தின் மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறில் இருந்து குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பாபநாசம் அணை திறக்கப்பட்ட பிறகு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் அந்த அணையின் நீர்மட்டமும் 41.50 அடியாகவே உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து எதுவும் இல்லை.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் தலா 5,500 மில்லியன் கன அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டவை ஆகும். ஆனால் தற்போது பாபநாசம் அணையில் 835 மில்லியன் கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் 378 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

மேலும் 1,225 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கும் அளவு கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையிலும் 167 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை கணக்கில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முழுமையாகவும், தென்காசி மாவட்டத்தில் பகுதியாகவும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுதவிர நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளான கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கும் நீர்வரத்து இல்லை. எனவே, இயற்கை கைகொடுத்து தொடர்ந்து மழை பெய்தால்தான் குடிநீர் பஞ்சத்தில் இருந்து தப்ப முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்