பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

1 மாதத்திற்கு பின்னர் அனுமதி அளிக்கப்பட்டதால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.;

Update:2023-03-05 01:33 IST

விக்கிரமசிங்கபுரம்:

1 மாதத்திற்கு பின்னர் அனுமதி அளிக்கப்பட்டதால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

அகஸ்தியர் அருவி

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், ஆன்மிக அருவியாக திகழ்வதாலும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.

வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் காரணமாக கடந்த மாதம் 8-ந் தேதியில் இருந்து அகஸ்தியர் அருவி உள்பட பாபநாசம் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

இதற்கிடையே அகஸ்தியர் அருவியில் தடுப்புச்சுவரை புதுப்பிக்கும் பணிகளும், தடாகப்பகுதி, அருவியை சுற்றிலும், அருவிக்கு செல்லும் வழியிலும் தடுப்பு கம்பிகளும் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனால் அகஸ்தியர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

இந்த நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முதல் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினார். அதன்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவிக்கு வருகை தந்தனர். அவர்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் செல்பி எடுத்து அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இருப்பினும் அருவிக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக இருப்பதால் ஏராளமான வாகனங்கள் ஊர்ந்து கொண்டே சென்றது. இதனால் அருவி பகுதியை பராமரித்தது போல் இந்த சாலையையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்