பி சேனல் பாசன வாய்க்கால்- ஓடம்போக்கி ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

பி சேனல் பாசன வாய்க்கால்- ஓடம்போக்கி ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

Update: 2023-07-15 18:45 GMT

திருவாரூரில் பி சேனல் பாசன வாய்க்கால் மற்றும் ஓடம் போக்கி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓடம்போக்கி ஆறு

திருவாரூர் மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் மிகவும் முக்கியமானது ஓடம்போக்கி ஆறு ஆகும். காவிரி ஆற்றின் கிளை ஆறாக பிரிந்து, என்கண் என்ற ஊரில் இருந்து தொடங்கி திருவாரூர் நகரின் மையப்பகுதி வழியாக இந்த ஆறு பயணிக்கிறது. இந்த ஆற்றின் மூலம் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மிக முக்கியமான நீராதாரமாக ஓடம்போக்கி ஆறு விளங்கி வந்தது. இந்த ஆற்றில் இருந்து ஏராளமான பாசனவாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன. அவற்றின் மூலமும் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதிகள் பெறுகின்றன. அதே போல் பல்வேறு கிராமங்களுக்கு முக்கிய நீராதாரமாகவும் விளங்கி வருகின்றன. அதன் ஒருபகுதியாக பி சேனல் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் திருவாரூர் நகரில் விளமல் அருகே ஓடம்போக்கி ஆற்றிலிருந்து பிரிந்து நகருக்குள் சுமார் 4 கி.மீ. தூரம் சென்று கேக்கரை பகுதியில் முடிவடைகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பாசன வாய்க்காலாக இருந்து வந்தது.

கழிவுநீர்

தற்போது இந்த வாய்க்காலில் கழிவுநீர் கலக்கப்படுவதால் அந்த நீரினை விவசாயத்திற்கு பயன்படுத்த விவசாயிகள் தயங்கி வருகின்றனர். மழை காலங்களில் இந்த வாய்க்கால் செல்லும் பகுதியில் உள்ள குளம், குட்டைகளிலும் கழிவுநீர் கலப்பதால் அதில் உள்ள நீரினை பயன்படுத்துவதற்கு மக்கள் தயங்கி வருகின்றனர். இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் அவர்களுக்கு உடலில் அரிப்பு, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.இதேபோல் பழைய பஸ் நிலையம் அருகே ஓடம்போக்கி ஆற்றில் கழிவுநீர் கலந்து விடுகிறது. கிடாரங்கொண்டான் பகுதியில் ஆகாயதாமரைகள் ஆக்கிரமித்து கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பி சேனல் பாசன வாய்க்கால் கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன், ஓடம் போக்கி ஆற்றில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்