ஆழியாறு அணையில் குழந்தைகளுடன் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
கணவர் கொடுமைப்படுத்துவதாக கூறி குழந்தைகளுடன் ஆழியாறு அணையில் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கணவர் கொடுமைப்படுத்துவதாக கூறி குழந்தைகளுடன் ஆழியாறு அணையில் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை முயற்சி
ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதற்கிடையில் அணையில் ஒரு பெண், 4 குழந்தைகளுடன் அழுது கொண்டிருந்தார். இதை அங்கு வந்த மூதாட்டி சின்னாள் என்பவர் பார்த்து உள்ளார். பின்னர் அவர் அந்த பெண்ணிடம் என்ன பிரச்சினை என்று கேட்டார்.
அதற்கு அவர் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள வந்ததாக கூறினார். இதை கேட்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் திண்டுக்கல்லை சேர்ந்த 29 வயது பெண் என்பதும், தனது 4 பெண் குழந்தைகளுடன் ஆழியாறுக்கு வந்ததும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
மேலும் தனக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளதால், அதில் ஒரு குழந்தையை கணவர் விற்பனை செய்ய முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் பெண்ணின் கணவரை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தினமும் குடித்து விட்டு தனது மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும், இதன் காரணமாக அந்த பெண் தனது 4 குழந்தைகளுடன் ஆழியாறு அணைக்கு தற்கொலை செய்வதற்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதற்கிடையில் துரிதமாக செயல்பட்டு 5 பேரையும் மூதாட்டி மீட்டார். ஆழியாறு அணையில் குழந்தைகளுடன் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பெண் மற்றும் 4 குழந்தைகளை ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.