விவசாயிகளின் சம்மதத்துடன் ஆழியாறு குடிநீர் திட்டம்-அமைச்சர் கே.என்.நேரு தகவல்

ஆழியாறு குடிநீர் திட்டம் விவசாயிகளின் சம்மதத்துடன் நிறைவேற்றப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Update: 2022-09-03 13:34 GMT

கே.என்.நேரு ஆய்வு

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் விசாகன் வரவேற்றார். இந்த கூட்டத்துக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் நிறைவேற்றப்பட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், மக்களுக்கு அடிப்படை வசதிகள், சுகாதாரம் முக்கியம். எனவே குடிநீர், சாக்கடை கால்வாய், கழிப்பறை, சாலை ஆகிய வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளித்து நிறைவேற்றப்படும். எனவே தெருவிளக்கு, சாலை, குடிநீர், சாக்கடை கால்வாய் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆழியாறு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தியாகும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் கடைகளை மிகவும் குறைந்த வாடகைக்கு விடக்கூடாது, என்றார்.

அமைச்சர் இ.பெரியசாமி

கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், திண்டுக்கல் ஒரு காலத்தில் வறட்சியான மாவட்டமாக இருந்தது. தி.மு.க. ஆட்சியில் ஏற்கனவே ஒரு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது மேலும் ஒரு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகள் குடிநீர் வசதி பெறும். அதோடு வழியோர பகுதியான வேடசந்தூரும் பயன்பெறும். மேலும் வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரவேண்டும். வைகை அணை குடிநீர் திட்டத்தில் பேரணை குழாயை பயன்படுத்தினால் செலவை குறைத்து எளிதாக குடிநீரை கொண்டு வரலாம். இதனால் மாவட்டம் முழுவதும் குடிநீர் வசதி கிடைக்கும். திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் 15 ஏக்கர் உள்ளது. அது வசதியாக இல்லாவிட்டால் வேறுஇடத்தில் பஸ் நிலையம் அமைக்கலாம், என்றார்.

அமைச்சர் அர.சக்கரபாணி

உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் என அனைத்தையும் தி.மு.க. வென்றுள்ளது. எனவே திண்டுக்கல் மாவட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கி அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவேண்டும். நல்ல மன்னர் ஆட்சி செய்தால் மாதம் மும்மாரி மழை பெய்யும் என்பார்கள். ஆனால் மாதத்தில் 30 நாளும் மழை பெய்கிறது. அந்த அளவுக்கு நல்ல ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகள் பெய்யாத மழை கொட்டி தீர்க்கிறது. இன்னும் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு வருங்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் வகையில் திட்டங்களை நிறைவேற்றி தரவேண்டும், என்றார்.

உள்ளாட்சி தலைவர்கள் கோரிக்கை

இதில் நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, இயக்குனர் பொன்னையா, பேரூராட்சிகள் இயக்குனர் செல்வராஜ், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வேலுச்சாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், கம்பம் ராமகிருஷ்ணன், சரவணக்குமார், மகாராஜன் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் சாலை, குடிநீர், சாக்கடை கால்வாய் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆழியாறு திட்டம்

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆழியாறு குடிநீர் திட்டம் விவசாயிகளின் சம்மதத்துடன் செயல்படுத்தப்படும். கேரளாவில் இருந்து வரவேண்டிய தண்ணீரை பெற்றுத்தரும்படி விவசாயிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்துக்கு ரூ.930 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எனவே மாற்று திட்டத்தில் காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கு ஆய்வு செய்யப்படுகிறது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்