கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் ஆழியாறு மீட்டெடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கழிவுநீர் கலப்பதால் ஆழியாறு மாசுபட்டு வருகிறது. அதை மீட்டெடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனைமலை
கழிவுநீர் கலப்பதால் ஆழியாறு மாசுபட்டு வருகிறது. அதை மீட்டெடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆழியாறு அணை
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணை, 120 அடி கொள்ளளவு கொண்டது. இங்கிருந்து கோட்டூர், ஆனைமலை, அம்பராம்பாளையம், மணக்கடவு வழியாக கேரளாவுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் ஆழியாறு அணை அருகே கம்பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டம், மயிலாடுதுறை பகுதியில் மயிலாடுதுறை கூட்டு குடிநீர் திட்டம், ஆனைமலை பேரூராட்சி குடிநீர் திட்டம் உள்பட 8 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது தவிர அம்பராம்பாளையம் பகுதியை அடுத்த குளத்தூர் பகுதியில் 295 கிராமங்கள் பயன்பெறும் கூட்டு குடிநீர் திட்டம், ஆத்துப்பொள்ளாச்சி பகுதியில் குறிச்சி, குனியமுத்தூர், கிணத்துக்கடவு பகுதிகளுக்கான குடிநீர் திட்டம் போன்றவை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆனைமலை பகுதியில் பேரூராட்சிகளின் மூலம் சில குடிநீர் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளது. பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளுக்கு மட்டும் அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து தினமும் 90 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் குடிநீர் எடுத்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றது. இதன் மூலம் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கும், பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.இந்த நிலையில் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், கோட்டூர் போன்ற பகுதிகளில் செல்லும் ஆழியாற்றில் தினமும் 6 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். அதன்விவரம்வருமாறு:-
சுத்திகரிப்பு நிலையம்
மோகன்ராஜ்(மர வியாபாரி):
ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடக்கூடிய வற்றாத ஜீவ நதியாக திகழ்ந்து வரும் ஆழியாற்றுடன் பாலாறு உள்ளிட்ட சிற்றாறுகள் இணைகின்றன. ஆனால் கடந்த சில மாதங்களாக ஆழியாறு மிகவும் மாசடைந்து வருகிறது. இதற்கு காரணம், குப்பைகள் கொட்டப்படுவதுடன் கழிவுநீர் கலப்பதே ஆகும்.
மேலும் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் வளர்ந்து வருகின்றன. கடந்த மே மாதம் 15-ந் தேதி ஆழியாறு அணை திறக்கப்பட்டபோது, ஆகாயத்தாமரைகள் அடித்து வரப்பட்டு, பாலத்தின் அடியில் சேகரமானது. இது ஆனைமலை பேரூராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. இதனால் ஆறு அழகாக காட்சியளித்தது. ஆனால் தற்போது மீண்டும் ஆகாயத்தாமரைகள் அதிகரித்து, ஆறு தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்து கிடக்கின்றன. எனவே போர்க்கால அடிப்படையில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும். மேலும் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
பிளாஸ்டிக் குப்பைகள்
கிருஷ்ணன்(கூலி தொழிலாளி):-
ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன்புதூர் அழுக்குசாமியார் கோவில் பின்புறம் சாக்கடை கழிவுநீர் உப்பாற்றில் கலந்து ஆழியாற்றில் இணைகிறது. மேலும் பல்வேறு இடங்களில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுவதால், ஆற்று தண்ணீர் மாசுபட்டு வருகிறது. இதை தடுத்து, ஆற்றை மீட்டெடுக்க வேண்டும்.
தர்மர்(மளிகை கடைக்காரர்):-
ஆனைமலை பேரூராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள கால்வாய் வழியாக ஆழியாறும், உப்பாறும் ஒன்று சேரும் இடத்தில் தினமும் 6 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டில் இல்லாததால் கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. எனவே ஆனைமலை பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவேண்டும்.
இடம் தேர்வு
முகமது பாரூக்(ஆம்புலன்ஸ் டிரைவர்):- ஆனைமலை பகுதி மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக ஆழியாறு உள்ளது. இங்கு இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகளை சமூக விரோதிகள் வீசி செல்கின்றனர். இதனால் தண்ணீர் மாசுபட்டு கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. இதை தடுக்கும் வகையில் ஆற்றின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
இதுகுறித்து பேரூராட்சி அதிகரிகள் கூறும்போது, ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கும் என்றனர்.