பூக்குழி இறங்கிய அய்யப்ப பக்தர்கள்
பாளையங்கோட்டையில் அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
பாளையங்கோட்டை புதுப்பேட்டைத் தெருவில் உள்ள தேவி புது உலகம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு கணபதி ஹோமமும், 7 மணிக்கு பால்குடம் ஊர்வலமும், தொடர்ந்து உலகம்மனுக்கும், அய்யப்ப சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு அய்யப்ப பஜனையும், பகல் 1 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு பைரவர் பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து நெல்லை வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவிலில் இருந்து மஞ்சள் நீராடி அய்யப்ப பக்தர்கள், மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து இரவு 10 மணிக்கு பூக்குழி இறங்கினார்கள். இரவு 11 மணிக்கு கன்னி பூஜை நடந்தது.