சேலம் கடை வீதிகளில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்-துளசி மணி மாலைகள் வாங்க தீவிரம்

கார்த்திகை மாதம் இன்று தொடங்குவதையொட்டி மாலை அணிந்து விரதம் இருக்கும் அய்யப்ப பக்தர்கள் துளசி மணி மாலைகள், வேட்டிகள் வாங்க சேலம் கடை வீதிகளில் குவிந்தனர்.

Update: 2022-11-16 22:19 GMT

சபரிமலை அய்யப்பன் கோவில்

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்ல விரதம் தொடங்குவார்கள். கார்த்திகை மாதம் இன்று (வியாழக்கிழமை) பிறக்கிறது.

இதை முன்னிட்டு சேலம் மாநகர் பகுதியில் பக்தர்கள் மாலை அணிந்து கொள்வதற்கு தேவையான துளசி மணி மாலை, கருப்பு மற்றும் காவி வேட்டி, துண்டு உள்ளிட்டவை சேலம் சின்னக்கடை வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் விற்பனைக்கு உள்ளன.

அதேபோன்று சேலம்-பெங்களூரு புறவழிச்சாலை, சேலம் கந்தாஸ்ரமம் ஆகிய இடங்களில் சாலையோரத்திலும் வேட்டி, துண்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இதனை வாங்க கடை வீதிகளில் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்.

பூஜை பொருட்கள்

இதுகுறித்து அய்யப்ப பக்தர்கள் சிலர் கூறியதாவது:-

நாங்கள் பல ஆண்டுகளாக மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை சென்று வருகிறோம். இந்தாண்டு கார்த்திகை மாதம் 1-ந் தேதியான நாளை (இன்று) எங்கள் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று மாலை அணிய உள்ளோம். பின்னர் விரதம் இருந்து இருமுடி கட்டிக்கொண்டு கோவிலுக்கு சென்று வழிபடுவோம். மாலை அணிவிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறும் போது,' அய்யப்ப பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக வேட்டி, துண்டு, பாசி மாலைகள் உள்ளிட்டவை் விற்பனைக்காக ஏற்கனவே தயார் நிலையில் வைத்துள்ளோம். காவி மற்றும் கருப்பு நிற வேட்டி ஒன்று ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்கிறோம். துண்டு ரூ.60 முதல் ரூ.125 வரை விற்கிறோம்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்