அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் குமரி மாவட்ட கோவில்களில் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

Update: 2022-11-17 18:45 GMT

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் குமரி மாவட்ட கோவில்களில் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

அய்யப்ப பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனத்துக்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

இதற்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி அய்யப்பனை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்களும், மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம்.

மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

அதன்படி நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதனால் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் பகுதியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.

அதிகாலையில் பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் உள்ள பரசுராமர், விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சரண கோஷம் முழங்க துளசி மாலை அணிந்தனர். இதேபோல் பார்வதிபுரம் அய்யப்பசாமி கோவில், குமாரகோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிய சென்றதால் அதிகாலையில் கூட்டம் அதிகமாக இருந்தது.

கன்னியாகுமரியில் சீசன் காலம்

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாகும். இந்த 3 மாதங்களும் சபரிமலை செல்லும் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம். இதனால் அங்கு கூட்டம் அலைமோதும். இதனால் இங்கு குற்ற சம்பவங்களை தடுக்க தினமும் 60 போலீசார் பாதுகாப்பு பணிகளை சுழற்சி முறையில் மேற்கொள்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்