மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் பிறந்ததை தொடர்ந்து, மாலை அணிந்து அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினார்கள்.

Update: 2022-11-17 18:45 GMT

ஊட்டி

கார்த்திகை மாதம் பிறந்ததை தொடர்ந்து, மாலை அணிந்து அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினார்கள்.

சபரிமலை

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பிறந்தாலே மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து பய பக்தியுடன் அய்யப்பனை தரிசிக்க இருமுடியை தலையில் சுமந்து சபரிமலை நோக்கி பக்தர்கள் செல்வார்கள். இந்த ஆண்டு நேற்று கார்த்திகை மாதம் பிறந்தது. இதையொட்டி மண்டல பூஜைக்காகவும், மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து 41 நாட்கள் விரதத்தை பக்தர்கள் தொடங்கி உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரதத்தை பயபக்தியுடன் தொடங்கினார்கள். இதையொட்டி அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு பல்வேறு கோவில்களில் குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர். ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் காலையில் பக்தர்கள் வரிசையாக நின்று மாலை அணிந்து கொண்டனர். கோவில் நம்பூதிரி கோவிந்தன் மாலை அணிவித்தார்.

மாலை அணிந்து...

அப்போது சுவாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோ‌ஷம் எதிரொலித்தது. இதற்காக நேற்றைய தினம் கடைகளில் கருப்பு வேஷ்டி, துண்டுகள் மற்றும் மாலைகளை வாங்கி தயாராக வைத்திருந்தனர். மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.

மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள், அய்யப்ப கோவிலில் இருமுடி கட்டுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அய்யப்ப சீசன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து அது தொடர்பான வியாபாரமும் சூடுபிடித்து உள்ளது.

சந்தன மாலை, ரத்த சந்தனமாலை, ஸ்படிக மாலை, ருத்திராட்ச மாலை, துளசி மாலை, செந்துளசி மாலை என 12 வகையான மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் அய்யப்ப சாமி டாலர்களும் விற்பனைக்கு வந்துள்ளன. இதை பக்தர்கள் வாங்கி செல்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்