குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்

குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் குவிந்து, அருவிகளில் குளித்து சரண கோஷம் எழுப்பினர்;

Update: 2022-11-17 18:45 GMT

குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் குவிந்து, அருவிகளில் குளித்து சரண கோஷம் எழுப்பினர்.

குற்றாலத்தில் குவிந்தனர்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்கு கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் விரதம் தொடங்குவார்கள். சபரிமலைக்கு தென்காசி வழியாக செல்லும் பெரும்பாலான பக்தர்கள் குற்றாலம் வந்து செல்வது வழக்கம்.

இவ்வாறு வரும் பக்தர்கள் குற்றால அருவிகளில் குளித்துவிட்டு இங்குள்ள விநாயகர் கோவிலில் மாலை அணிந்து ஆண்டுதோறும் விரதத்தை தொடங்குவார்கள்.

விரதம் தொடங்கினர்

அதுபோன்று நேற்று காலை குற்றாலம் அருவிகளில் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். அந்த பக்தர்கள் குளித்துவிட்டு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கூட்டம், கூட்டமாக அய்யப்ப பக்தர்கள் அருவிக்கு வந்தனர். இதனால் அருவிக்கரையில் `சுவாமியே சரணம் அய்யப்பா' எனும் சரண கோஷங்கள் ஒலித்தன. இன்னும் 2 மாதங்கள் குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

குளிக்க அனுமதி

தற்போது குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. மெயின் அருவியில் கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு இருந்ததால் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் மதியம் முதல் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று நேற்றும் ஓரமாக நின்று அய்யப்ய பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, தென்காசியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் கேரள மாநிலம் ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்