குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்
குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் குவிந்து அருவிகளில் ஆனந்த குளியல் போட்டனர்;
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். அந்த மாதங்களில் அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து சீசனை அனுபவிப்பார்கள்.
அதன்பிறகு வடகிழக்கு பருவமழை பெய்யும்போது குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் தினமும் வருவது வழக்கம்.
இதேபோல் தற்போதும் கடந்த கார்த்திகை 1-ந் தேதி முதல் அய்யப்ப பக்தர்கள் வருகை குற்றாலத்தில் காணப்படுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிகமான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.
தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் நேற்று ஏராளமானோர் குவிந்தனர். அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.