களையிழந்த அய்யலூர் சந்தை
அய்யலூர் சந்தைக்கு விற்பனைக்கு ஆடுகள் வரத்து குறைந்ததால் களையிழந்து காணப்பட்டது.
அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். இதைக் கருத்தில் கொண்டு அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச் சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அய்யலூரில் ஆட்டுச் சந்தை கூடியது. அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் சந்தையில் குவிந்தனர்.
ஆனால் ஆடுகளின் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் ஆட்டுச் சந்தை கூட்டமின்றி களையிழந்து காணப்பட்டது. விற்பனையும் கடந்த வாரங்களை காட்டிலும் மந்தமாகவே இருந்தது. நேற்றைய சந்தையில் ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.300 முதல் ரூ.370 வரையிலும், 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது சந்தையில் ஆடு மற்றும் கோழிகளின் வரத்து குறைவாக இருந்ததால், விற்பனை மந்தமாகவே இருந்தது. வரும் வாரங்களில் அதிகமான திருவிழாக்கள் மற்றும் விேசஷங்கள் நடைபெறும் என்பதால் ஆடு மற்றும் கோழிகளின் விற்பனை அதிகரிக்கும், விலையும் உயரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.